நான் சிறுவனாக இருக்கும் போது தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதைப் பற்றிய
சிந்தனைகூட வரவில்லை. ஆனால் எனது மகன் குடிப்பதற்கு 20 ரூபாய் கொடுத்து
தண்ணீர் வாங்கித் தர கேட்கிறான். 30 வருடங்களில் தான் எத்தனை மாற்றம்.
பூமியின் வளங்களையெல்லாம் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி எதிர்கால
சந்ததியினர் பயன்படுத்த முடியாத அளவுக்கு புவியின் வளங்களை உறுஞ்சி
எடுத்துக்கொண்டு இருக்கிறோம்.கதறும் அந்த புவியின் குரலை நின்று நிதானமாய் கேட்பதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் 250 எட்டாம் வகுப்பு குழந்தைகள் இன்று நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரிக்கு வந்திருந்தனர். அவர்கள் ஐந்து குழுக்களாக பிரிந்து ஐந்து தலைப்புக்களில் சிந்திக்க ஆரம்பித்தனர்.
1.புவியின் செல்வங்கள் (wealth of earth )
2. பஞ்சம் (famine)
3. வறட்சி ( drought )
4. வெள்ளப்பெருக்கு (flood)
5. மாசுபடுதல் (pollution)
இந்த ஐந்து தலைப்புக்களிலும் ஐந்து அறிவியல் வல்லுநர்கள் தேவையான உள்ளீடுகளை இன்று கொடுத்தனர். இந்த ஐந்து தலைப்புக்களினாலும் பூமி எவ்வளவு துன்பப்படுகிறது என்பதை காட்சிப்படுத்தினர். பூமியின் அழுகுரலை கேட்க வைக்க முயற்சித்தனர்.
தொடர்ந்து மூன்று மாதங்கள் இந்த 250 குழந்தைகளும் இந்த தலைப்பில் சிந்திப்பார்கள். உற்றுநோக்குதல், கேள்வி கேட்பது, கருதுகோள்களை எழுதுவது, செயல்திட்டம் செய்வது போன்ற பல்வேறு விதமான செயல்பாடுகளை செய்வார்கள். ஒவ்வொரு குழுவில் இருந்தும் சிறப்பாக செயல்படும் 10 மாணவர்களை தேர்வு செய்து ( 5 குழுவிலிருந்து 50 மாணவர்கள்) இந்த வருடத்தின் எஞ்சிய ஏழு மாதங்கள் 'புவியின் குரல்' என்ற தலைப்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆராய்ச்சி செய்து தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை ஒரு மிகச்சிறந்த பல்கலைகழகத்தில் சமர்பிப்பார்கள்.
புவியின் குரலைக் கேட்க தயாரான இந்த குழந்தைகள் காதுகளுக்கு பூமியின் மகிழ்ச்சி குரல் கேட்கட்டும். பூமியின் அழுகுரல் கொஞ்சம் கொஞ்சமாய் மறையட்டும்.








