தமிழக சிறைகளில், 104 உதவி ஜெயிலர் பதவிக்கான தேர்வில், 18 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள மத்திய சிறைகள், மாவட்ட சிறைகளில், உதவி ஜெயிலர் பதவியில், 104 காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய மான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வை அறிவித்தது.
இதற்கு, 20 ஆயிரத்து, 791 பேர் விண்ணப்பித்தனர். இந்த தேர்வு நேற்று, தமிழகம் முழுவதும், 75 மையங்களில் நடந்தது. இதில், 18 ஆயிரம் பேர் பங்கேற்றனர். காலை மற்றும் பிற்பகலில் இரண்டு தாள்களாக தேர்வு நடந்தது.மனித உரிமைகள் குறித்த அரசியல் சட்டம், மாநில, மத்திய அரசின் நிர்வாகம், சமூக, பொருளாதார இந்திய பிரச்னைகள், தேசிய மற்றும் மாநில அளவில் நடப்பு பிரச்னைகள் குறித்த பாடங்களிலிருந்து, காலையில் நடந்த தேர்வில் கேள்விகள் இடம் பெற்றன. பொது படிப்புகள், திறனறித் தேர்வு, பொது தமிழ் மற்றும் ஆங்கில தேர்வு ஆகிய பாடங்களுக்கு, கொள்குறி வகை (அப்ஜெக்டிவ்) தேர்வு, பிற்பகலில் நடந்தது.