அரசு பள்ளியில் குடிபோதையில் ரகளை செய்து, சக மாணவரை தாக்கிய பிளஸ்-1 மாணவர் பள்ளியை விட்டு அதிரடியாக நீக்கப்பட்டார்.
குடிபோதையில் மாணவர்
வேலூரை
அடுத்த அலமேலுரங்காபுரத்தில் ஆதிதிராவிடர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
உள்ளது. இப்பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் பெருமுகை பகுதியை சேர்ந்த பிளஸ்-1
மாணவர் ஒருவர் நேற்றுமுன்தினம் பள்ளிக்கு குடிபோதையில் வந்தார்.
அத்துடன்
அந்த மாணவர், வகுப்பறையில் சக மாணவருடன் ரகளையில் ஈடுபட்டு அவரை
தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வந்த மற்ற மாணவர்களையும் அவர்
தாக்கினார். இதை பார்த்த ஆசிரியர்கள் தலைமை ஆசிரியருக்கு தகவல்
தெரிவித்தனர்.
அவர், இதுகுறித்து மாவட்ட
ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி பரமேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பள்ளிக்கு விரைந்து வந்த அவர் ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த மாணவர் குடிபோதையில்
தகராறு செய்தது தெரியவந்தது.
பள்ளியை விட்டு நீக்கம்
இதையடுத்து
அந்த மாணவரை பள்ளியில் இருந்து நீக்கம் செய்ய மாவட்ட ஆதிதிராவிடர்
நலத்துறை அதிகாரி பரமேஸ்வரி தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டார். அதை
தொடர்ந்து அந்த மாணவருக்கு மாற்று சான்றிதழ் (டி.சி.) வழங்கப்பட்டது.
மேலும்
அந்த மாணவரால் தாக்குதலுக்கு உள்ளான சக மாணவரின் பெற்றோர் தங்கள் மகனை
வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்
பேரில் அந்த மாணவர் ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம்
செய்யப்பட்டார்.







