அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி கட்டணத்துக்கு எதிரான வழக்கு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்;
அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி கட்டணத்துக்கு எதிரான வழக்கில்
தமிழக அரசுக்கும், பல்கலைக்கழகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம்
கோர்ட்டு உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
தமிழக அரசின் கீழ் இயங்கும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா
முத்தையா மருத்துவ கல்லூரியில், அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும்
கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி அமீரா பாத்திமா உள்பட
189 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை
விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மாணவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து
தீர்ப்பு வழங்கியது.
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக அமீரா
பாத்திமா உள்ளிட்ட 149 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு
தாக்கல் செய்தனர்.
அதில், ஐகோர்ட்டின் தீர்ப்பு மாணவர்களின்
நலனுக்கு எதிராக அமைந்து இருப்பதாகவும், எனவே, அந்த தீர்ப்பை ரத்து செய்து
அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ளது போன்ற கட்டணத்தை வசூலிக்க உத்தரவிட
வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
நோட்டீஸ்
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய் ஆகியோர்
அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள்
சார்பில் மூத்த வக்கீல் கே.எம்.விஜயன், சிவபாலமுருகன் ஆகியோர் ஆஜரானார்கள்.
அண்ணாமலை பல்கலைக்கழத்தின் சார்பில் மூத்த வக்கீல் நந்தகுமார் ஆஜரானார்.
வக்கீல்களின்
வாதங்களை கேட்ட நீதிபதிகள், மாணவர்களின் மேல்முறையீட்டு மீது 8
வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கோரி அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும்
தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் கல்வி கட்டணம் கட்ட
வேண்டிய இறுதி தேதியை அக்டோபர் 30–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.







