அண்ணா பல்கலை தேடல் குழு : இன்ஜி., கல்லூரிகள் அதிர்ச்சி:
அண்ணா பல்கலை துணைவேந்தருக்கான தேடல் குழுவில், தொழில்நுட்ப நிபுணர்கள்
இடம் பெறாததால், இன்ஜினியரிங் கல்லுாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. அண்ணா
பல்கலை துணைவேந்தர் பணியிடம், மே முதல் காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை
தேர்வு செய்யக்கோரி, அண்ணா பல்கலை ஆசிரியர் சங்கத்தினர், நேற்று
முன்தினம் உண்ணாவிரதம் இருந்தனர். இதையடுத்து, தேடல் குழுவை, தமிழக அரசு
அறிவித்துள்ளது.
இதுகுறித்து, பேராசிரியர்கள் கூறியதாவது: தேடல் குழு
உறுப்பினர்களில், அரசு பிரதிநிதியாக, ஓய்வு பெற்ற கூடுதல் முதன்மை செயலர்
ஹேமந்த்குமார் சின்ஹா, பல்கலை சிண்டிகேட் பிரதிநிதியாக, மதுரை தியாகராஜர்
இன்ஜி., கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குழுவின் ஒருங்கிணைப்பாளராக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணை வேந்தர்
பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தமிழ்நாடு வேளாண் பல்கலையின்
பேராசிரியராக பணியாற்றியவர்; விவசாயம் படித்தவர். அண்ணா பல்கலை, மத்திய
அரசின் உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்கு இணையாக, தொழில்நுட்ப
ஆராய்ச்சியில் விருதுகளை பெற்று வருகிறது. இன்ஜி., தொழில்நுட்ப கல்வியில்
முன்னணியில் உள்ள பல்கலை. எனவே, அண்ணா பல்கலை துணை வேந்தரை தேர்வு
செய்யும் குழுவில், தொழில்நுட்பம் படித்த மூத்த பேராசிரியர்கள்,
வல்லுனர்கள் இடம்பெற வேண்டும்; ஆனால், இன்ஜி., துறை சார்ந்த யாரும்
இடம்பெறவில்லை. மாறாக, விவசாயம் படித்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த
நடவடிக்கை, அண்ணா பல்கலை வளர்ச்சியில், உயர்கல்வித் துறை உரிய அக்கறை
காட்டவில்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள்
கூறினர்.







