
"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" - இந்த தாரக மந்திரச் சொல்லைக் கேட்டதுமே, தமிழக மக்கள் அனைவர் மனதிலும் நிழலாடும் உருவமாகத் திகழ்ந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதாதான்.
திரைத்துறையிலும், அரசியல் வாழ்விலும் தனக்கென ஒரு தனியிடத்தைக்
கொண்டு, இறுதி மூச்சு உள்ளவரை, எண்ணற்ற சாதனைகளைப் படைத்தவர் ஜெயலலிதா.
அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்.ஜி.ஆர், கடந்த 1972-ம் ஆண்டு
தொடங்கியது முதல், கோடிக்கணக்கான எம்.ஜி.ஆர் ரசிகர்களும், சாமான்ய மற்றும்
ஏழை-எளிய மக்களும், குறிப்பாக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்களும்
எம்.ஜி.ஆரின் பின்னால் அணிவகுத்து, அவருக்கு மகத்தான ஆதரவை அளித்தனர்.
ஏழை-எளிய
மக்களும், ரசிகர்களும் அளித்த பேரன்பு, எம்.ஜி.ஆரே எதிர்பார்க்காதது.
திரையுலகில் அளித்த பேராதரவைக் காட்டிலும், அரசியலில் தம்மை
திக்குமுக்காடச் செய்யும் அளவுக்கு அன்பையும், ஆதரவையும் தொடர்ந்து அளித்த
சாமான்ய மக்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்? என்று பல நாட்கள் இரவு,
பகலாக எம்.ஜி.ஆர் யோசித்ததன் விளைவாகவே, தமிழகத்தில் எம்.ஜி.ஆர்
ஆட்சியின்போது பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
சத்துணவுத்திட்டம்,
வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை, ஏழை மக்களுக்கு இலவச காலணி வழங்கும்
திட்டம், விவசாயிகளுக்கு தடையில்லா இலவச மின்சாரம் என்று, தம்மை முதல்வர்
பதவியில் அமர்த்தி வைத்த, சாமான்ய மக்களின் நலனில் அன்றாடம் அக்கறை கொண்டு,
தமிழக முதல்வர் பதவியை அலங்கரித்தவர் எம்.ஜி.ஆர்.
கடந்த 1977-ல் ஆட்சியைப் பிடித்தது முதல், 1987-ல் எம்.ஜி.ஆர் மறையும் வரை, தொடர்ந்து முதல்வராகப் பதவியில் இருந்தவர் எம்.ஜி.ஆர்.எம்.ஜி.ஆரை,
தனது அரசியல் ஆசானாகக் கொண்டு, அரசியலில் அவரது வழியைப் பின்பற்றி
ஏழை-எளிய மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவும், மகளிர் வாழ்வில்
தன்னம்பிக்கையுடனும், துணிவுடனும் திகழ்வதற்காகவும் பல்வேறு நலத்
திட்டங்களை செயல்படுத்தியவர் முதல்வர் ஜெயலலிதா.
தமது 68-வது வயதில்,
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்
ஜெயலலிதா. கடந்த 75 நாட்களாக, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், அவரது
உடல்நிலைலயில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நேற்று மாரடைப்பு ஏற்பட்டு,
தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரை மருத்துவர்களால் காப்பாற்ற
முடியவில்லை.
எம்.ஜி.ஆர் வழியில், செயல்பட்ட முதல்வர் ஜெயலலிதா,
'எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்'
என்று தனது ஒவ்வொரு உரையின் போதும், ஜெயலலிதா தவறாமல் குறிப்பிடுவார்.
ஏழை
மக்கள் எல்லாமும் பெற வேண்டும் என்பதற்காக, எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை
செயல்படுத்தி, அல்லும், பகலும் ஏழை மக்கள் நல்வாழ்விற்காக அயராது
பாடுபட்டு வந்த, ஏற்றமிகு ஏந்தலான முதல்வர் ஜெயலலிதா என்னும் ஒளிவிளக்கு
இப்போது அணைந்து விட்டது.
ஏழை மக்களுக்கு என்றென்றும் அரணாக விளங்கிய
ஜெயலலிதா-வின் ஆன்மா அவர் ஒவ்வொரு அ.தி.மு.க தொண்டன் மறைவின்போதும்,
தெரிவிப்பது போன்ற, இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்.
ஏழைகள் வாழ்வில், ஜெயலலிதா தொடங்கி வைத்த எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள், என்றென்றும் நீடிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.