பொறியியல் மாணவர்களுக்கு இறுதி ஆண்டில் தகுதி தேர்வு : அகில இந்திய தொழில்நுட்பக் குழு புதிய திட்டம்:
பொறியியல் கல்லூரி மாணவர்களின் திறமையை மதிப்பீடு செய்யும் வகையில் இறுதி ஆண்டில் அவர்களுக்கு தகுதி தேர்வு ஒன்றை நடத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு புதிய திட்டமிட்டுள்ளது. பொறியியல் கல்லூரியை முடித்து வெளியேறும் மாணவர்களில் பலர் அவர்கள் படிப்பு சார்ந்த வேலைகளுக்கு தகுதியற்றவர்களாக இருப்பதாக புகார் கூறப்படுகிறது. இதையடுத்து பொறியியல் கல்லூரி மாணவர்களின் திறமையை அவர்களது படிப்பு முடியும் இறுதி ஆண்டிலேயே மதிப்பீடு செய்யும் வகையில் தகுதி தேர்வு ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் டெல்லியில் நடைபெறும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் தகுதி தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் அடுத்த கல்வி ஆண்டு முதல் கேட் எனப்படும் பொறியியல் பட்டதாரிகளுக்கான தகுதி தேர்வு நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படும்.