மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில்,
புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வை ரத்து செய்ய, நிர்வாகக் குழு முடிவு
செய்துள்ளது.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு,
இரு ஆண்டுகளுக்கு முன், புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறை கொண்டு
வரப்பட்டது. சில குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும், சில மதிப்பெண்களுக்கு,
இந்த தேர்வு நடத்தப்படுகிறது.இந்த தேர்வால், மாணவர்களின் ஆய்வு மற்றும் தேடு திறன் அதிகமாகும் என, கருதப்பட்டது.
தேர்வுக்கு, நான்கு மாதங்களுக்கு முன், தேர்வுக்கான விடைகள் கொண்ட தொகுப்பு
புத்தகம், மாணவர்களுக்கு வழங்கப்படும். மாணவர்கள், அவற்றை படித்து தயாராக
வேண்டும். பின், அந்த புத்தகத்திலுள்ள அம்சங்கள், வினாத்தாளில் இடம்
பெறும். மாணவர்கள், புத்தகத்தை பார்த்து, விடை எழுத வேண்டும்.
இந்த தேர்வு அறிமுகமான பின், பள்ளிகள் மற்றும் மாணவர்களிடம் ஆய்வு
நடத்தியதில், புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வு, மாணவர்களின் கல்வியில்,
எந்த முன்னேற்றத்தையும் தரவில்லை என, தெரிய வந்தது.
பல பள்ளிகளில்
தேர்வு நடக்கும் முன்பே, மாணவர்களுக்கு ரகசியமாக கேள்வியை கொடுத்து
விடுவதால், புத்தகத்தில், எந்த பக்கத்தில் பதில் உள்ளது என்பதை, மாணவர்கள்
குறித்து வந்து, தேர்வு எழுதியுள்ளனர். எனவே, வரும் கல்வி ஆண்டு முதல்,
புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வை நிறுத்த, சி.பி.எஸ்.இ., நிர்வாக
கமிட்டி முடிவு செய்துள்ளது.