நம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வீட்டுக்கடனுக்கான
வட்டிவிகிதத்தை 8.60 சதவிகிதத்தில் இருந்து 8.35 சதவிகிதமாக அதிரடியாகக்
குறைத்துள்ளது. இந்த வட்டிவிகிதம் வீட்டுக்கடன் துறையில் மிகவும் குறைந்த
ஒன்றாகும்.
பிரதம மந்திரியின் `அனைவருக்கும் வீடு' என்ற கனவு திட்டத்தின் படி, ஏழை,
எளியோர் மற்றும் நடுத்தர மக்களுக்கு வீடுகளைக் கட்டித்தர அரசு பல
விதங்களில் ஊக்கமளித்து வருகிறது. இந்த நிலையில் அரசின் `அனைவருக்கும்
வீடு' திட்டத்துக்கு உதவும் விதத்தில் நாட்டின் மிகப் பெரிய வீட்டுக் கடன்
வழங்கும் வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, 2017-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி
முதல் வட்டி விகிதத்தில் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து, 8.35
சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது. இந்த வட்டி விகிதம் குறிப்பிட்ட காலக்கெடுவான
2 வருடங்களுக்கானதாகும். வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு ஏற்ப மிதப்பு
விகித அமைப்பில் (floating rate) இருக்கும்.
இந்த வட்டி விகிதம் 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக்கடன்களுக்குப்
பொருந்தும். இந்த வசதி கட்டுப்படியாகக்கூடிய வீடு கட்டும் அல்லது வீடு
வாங்குபவர்களுக்குப் பெரியளவில் உதவியாக இருக்கும். லட்சக்கணக்கான
வீட்டுக்கடன் வாடிக்கையாளர்கள் தங்கள் கனவு இல்லத்தை அமைக்க உதவும் என்று
எஸ்பிஐ எதிர்பார்க்கிறது. ஆனால், இந்த வட்டிவிகிதம் ஏற்கெனவே இருக்கும்
வீட்டை புனரமைக்க கடன் வழங்கப்படாது.
இது குறித்து சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாரத ஸ்டேட்
வங்கியின் ரியல் எஸ்டேட் பிரிவு துணைப் பொதுமேலாளர் குமார்
கூறுகையில்,"முதல் வீடு வாங்குவது என்பது ஒவ்வொரு நபரின் மிகப்பெரிய நிதி
சம்பந்தப்பட்ட முடிவாகும். முதல் வீடு என்பது ஒரு உணர்வுபூர்வமான
விஷயமாகவும் இருக்கிறது. வீட்டுக்கடன் வழங்கும் மற்ற போட்டியாளர்களைப்போல்,
ஒரு குறிப்பிட்ட கடன் பயனாளிகளுக்கு மட்டும் வழங்குவது எங்கள் நோக்கம்
அல்ல. இந்த வட்டி விகிதம், 80 சதவிகிதத்துக்கும் அதிகமான அனைத்து மாதந்திர
சம்பளதாரர்களுக்குப் பொருந்தும்.
இந்தக் கவர்ச்சிகரமான வட்டி திட்டம் மூலமாக, தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்
2.67 லட்சம் ரூபாய் வரையிலான வட்டி மானியத்தைப் பிரதம மந்திரி ஆவாஸ்
திட்டத்தின் மூலமாகப் பெற முடியும். இந்தக் கட்டுப்படியாகக்கூடிய வீட்டு
வசதித் திட்டத்தை மேலும் பிரபலப்படுத்த பாரத ஸ்டேட் வங்கி மற்றுமொரு
நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, நாங்கள் கட்டுப்படியாகக்கூடிய வீட்டு
வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தரும் திட்டத்தை மேற்கொள்ளும்
கட்டுமானத் தொழிலதிபர்களுக்கு, வட்டியில் 35 அடிப்படைப் புள்ளிகள் வரை
சலுகை அளித்து உற்சாகமளிக்க இருக்கிறோம். இதனால் இரு வகையில் பயன் உள்ளது.
கட்டுமானத்துறையும் பயன் பெறுகின்றனர், அதாவது கட்டுமானத்துக்கு நிதி
கிடைக்கிறது மற்றும் கட்டுப்படியாகக்கூடிய வீட்டுக்கான வீட்டுக்கடனும்
அளிக்கப்படுகிறது.
பாரத ஸ்டேட் வங்கி 30 லட்சம் ரூபாய்க்கு அதிகமான வீட்டுக் கடனுக்கு வட்டி
விகிதத்தில் சலுகையும் அளிக்கிறது. இனிமேல் 30 லட்சம் ரூபாய்க்கு அதிகமான
கடனுக்கு, வட்டி விகிதம் ரிஸ்க் அடிப்படையிலான விலை நிர்ணயத்தல் (Risk
based price mechanism) முறையில் இருக்கும்.
தற்போதைய அடைப்படை விகித வாடிக்கையாளர்கள், தங்கள் வீட்டுக்கடனை, இப்போதைய
எம்சிஎல்ஆர் (MCLR) உடன் இணைந்த கார்ட் விகிதத்துக்கு மாற்றிக் கொள்ளலாம்.
இதற்குக் கடன் நிலுவைத் தொகையின் 0.30 சதவிகிதம், அதாவது அதிகபட்சமாக
25,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். வாடிக்கையாளர் விரும்பினால்,
தற்போதைய வட்டி விகிதத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு, எந்தவித கட்டணமும்
இல்லாமல், அடிப்படை விகிதத்தில் இருந்து எம்சிஎல்ஆர்-க்கு மாற்றிக்
கொள்ளலாம். சிறப்புச் சலுகையாக வீட்டுக்கடனை மற்ற நிதி
நிறுவனங்களிடமிருந்து மாற்றிக்கொள்வதற்கான செயல்முறைக் கட்டணம் முற்றிலும்
தள்ளுபடிசெய்யப்படும். இந்த வட்டி விகிதக்குறைப்பு ஒரு சிறப்புச்
சலுகையாகும். இந்தச் சலுகை 31 ஜூலை 2017 வரை மட்டுமே நடைமுறையில்
இருக்கும்" என்றார் அவர்.