பெரும்பாலான மாவட்டங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு
செயல்படுத்தப்படாமல் உள்ளது. சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ஆயிரம்
ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி 2016 சட்டசபைத் தேர்தலுக்கு முன் சத்துணவு ஊழியர்கள் தொடர்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஓய்வூதியத்தை 1,500 ரூபாயாக
அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் இந்த தொகை ஏற்கனவே ஓய்வூதியம்
பெறும் ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது. இந்த அரசாணையை
ஒரு சில மாவட்டங்களை தவிர, பெரும்பாலான மாவட்டங்களில் அமல்படுத்தவில்லை.
இதனால் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். அதேபோல் சத்துணவு மையங்களை
கூடுதலாக கவனிக்கும் பொறுப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட 600 ரூபாயும், 2010
க்கு பின் வழங்கவில்லை. மேலும் சமையலர், உதவியாளர்களுக்கு ஆண்டு ஊதிய
உயர்வு தரவில்லை. இதை கண்டித்து போராட்டம் நடத்த சத்துணவு ஊழியர்கள்
தயாராகி வருகின்றனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பாண்டி கூறுகையில், “ஓய்வூதிய உயர்வுக்கு 2016 பிப்ரவரியில்
அரசாணை வெளியிடப்பட்டது. ஓராண்டிற்கு மேலாகியும் நடை
முறைப்படுத்தவில்லை,” என்றார்.