RTE : இலவச கல்விக்கு விண்ணப்பிக்க மே 26 வரை அவகாசம் நீட்டிப்பு
எட்டாம் வகுப்பு வரை, மெட்ரிக் பள்ளிகளில் இலவசமாக படிப்பதற்கான, விண்ணப்ப
பதிவுக்கு, மே, 26 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தில்,
தனியார் மெட்ரிக் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணம், நன்கொடை
இன்றி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். எல்.கே.ஜி.,யில் சேரும்
மாணவர்களுக்கு, எட்டாம் வகுப்பு வரை, எந்த கட்டணமும் இன்றி படிக்கலாம்.
பொருளாதாரத்தில் நலிந்த, ஆண்டுக்கு, ௨ லட்சம் ரூபாய்க்கு குறைவான, வருமானம்
பெறுவோரின், குழந்தைகள், இதில் சேரலாம். இந்த ஆண்டு, எல்.கே.ஜி., என்ற
நுழைவு வகுப்பில், 10 ஆயிரம் பள்ளிகளில், 1.26 லட்சம் இடங்கள்,
ஒதுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில், பதிவு செய்ய
வேண்டும். இதுவரை, 43 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்த பதிவு, இன்று
முடிவதாக இருந்தது.
ஆனால், அவகாசத்தை நீட்டிக்க, பெற்றோர் விரும்புவதாக, நேற்று முன்தினம்
செய்தி வெளியானது. இதையடுத்து, வரும், 26ம் தேதி வரை, கூடுதல் அவகாசம்
வழங்கி, தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இந்த விபரங்களை,
மாவட்ட கலெக்டர் அலுவலகம், முதன்மைக் கல்வி அதிகாரி, மாவட்டக் கல்வி
அதிகாரி, மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், தொடக்கப் பள்ளிக்கல்வி அதிகாரி
அலுவலகம் ஆகியவற்றில், தெரிந்து கொள்ளலாம்.
இ - சேவை மையங்களிலும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.