
‘நீட்’ தேர்வு வினாத்தாளில் இடம் பெற்ற 4 தவறான கேள்விகளுக்கான தீர்வு குறித்து சி.பி.எஸ்.இ. விளக்கம் அளித்தது.நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக கடந்த 7-ந் தேதி ‘நீட்’ என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்திய மருத்துவ கவுன்சிலுக்காக, சி.பி.எஸ்.இ. இந்த தேர்வை நடத்தியது.
இதில், மாணவர்களிடம் பின்பற்றப்பட்ட கெடுபிடிகள் குறித்து சர்ச்சைகள் எழுந்தன. கேரளாவில், ஒரு மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்னதற்காக, அம்மாணவியிடம் பள்ளி முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. உத்தரவிட்டது. மேலும், அத்துமீறி நடந்து கொண்டதற்காக, 4 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்தது.
இதற்கிடையே, ‘நீட்’ தேர்வு வினாத்தாளில் 4 தவறான கேள்விகள் இடம்பெற்றுள்ளதாக பாட நிபுணர்களும், தேர்வு எழுதிய மாணவர்கள் சிலரும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதற்கு சி.பி.எஸ்.இ. தரப்பு நேற்று விளக்கம் அளித்தது. இதுகுறித்து சி.பி.எஸ்.இ. உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கேள்விகளில் இடம்பெற்ற தவறுகள், முற்றிலும் கல்வி சம்பந்தப்பட்டவை. அவற்றுக்கு பாட நிபுணர்கள் தீர்வு அளிப்பார்கள். ‘நீட்’ தேர்வுக்கான அதிகாரபூர்வ விடைகள் வெளியிடப்படும்போது, மாணவர்கள் தங்கள் ஆட்சேபனைகளை எழுப்பலாம்.
விடைகள் வெளியிடப்படும் தேதி, நீட் இணையதளத்தில் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆந்திர மாநிலத்தில் ஒரு மையத்தில் தேர்வு எழுதிய தெலுங்கு பயிற்று மொழி மாணவர்கள், தங்களுக்கு தெலுங்கு மொழி கேள்வித்தாளை அளிக்காமல், இந்தி-ஆங்கில மொழி கேள்வித்தாள் அளிக்கப்பட்டதாக கூறியுள்ளனர். அதுகுறித்து சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.








