பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது : ரேங்க் முறை இனி கிடையாது
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. மாநில
அளவில் 1, 2, 3 இடங்களை பிடித்த மாணவர்கள் என்ற ரேங்க் முறை இனி கிடையாது
என்று அரசு அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக பள்ளிகளுக்கு மதிப்பெண்கள்
அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2
தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. காலை 10 மணிக்கு அரசுத் தேர்வுகள்
இயக்குநர் வசுந்தராதேவி தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். தமிழகம்,
புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763
மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.
மாணவர்களை விட இந்த ஆண்டு மாணவியர் 62 ஆயிரத்து 843 பேர் கூடுதலாக தேர்வு
எழுதியுள்ளனர். அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 5 லட்சத்து 97 ஆயிரத்து 738
பேரும், வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் 2 லட்சத்து 23 ஆயிரத்து 977
பேரும், கலைப் பாடத் தொகுதியின் கீழ் 13 ஆயிரத்து 354 பேரும், தொழில் பாடப்
பிரிவின் கீழ் 63 ஆயிரத்து 694 பேரும் எழுதியுள்ளனர். தனித் தேர்வர்களாக
34 ஆயிரத்து 868 பேரும் எழுதினர்.
கடந்த ஆண்டுகளில் தேர்வு முடிவுகள் வெளியானதும் பள்ளிகளில் உள்ள தகவல்
பலகைகளில் தேர்வு முடிவுகள் ஒட்டப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள்,
மாவட்ட நூலகங்கள் ஆகியவற்றில் உள்ள கணினிகள் மூலம் தேர்வு முடிவுகளை
மாணவர்கள் தெரிந்து கொண்டனர். இதுதவிர, அரசுத் தேர்வுத் துறையின் இணைய
தளங்களிலும் தேர்வு முடிவுகளை பார்க்க முடியும்.
இந்நிலையில், இந்த ஆண்டு முதல் செல்போன்கள் மூலம் தேர்வு முடிவுகளை அனுப்பி
வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுத
பதிவு செய்யும் போதே அவர்களின் செல்போன் எண்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
பெற்று, தேர்வுத் துறைக்கு அனுப்பி இருந்தனர். தற்போது, அந்த செல்போன்
எண்களுக்கு தேர்வுத்துறையே தேர்வு முடிவுகளை அனுப்பி வைக்க முடிவு
செய்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான உடனே மாணவர்களின் செல்போன்களுக்கு
மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் வரும்.
மேலும், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கான மதிப்பெண்கள்
அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மாநில அளவில் 1, 2, 3 இடங்கள்
என ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டு இனி ரேங்க் முறை கிடையாது என்று அரசு
அறிவித்துள்ளது. மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறந்த
மாணவர் என்ற சான்று மட்டுமே வழங்கப்படும்.
பாடதிட்டம் தாமதம்: பள்ளிக் கல்வித்துறையில் ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகும்
பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 10
ஆண்டுக்கும் மேலாக தமிழக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படாமல் இருந்தது.
2015ம் ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றி அமைப்பதற்கான
ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்தது.
அதற்காக வல்லுநர் குழு அமைக்கப்பட்டு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும்
பயிற்சிக் கழகத்தின்(NCERT) வரைவு பாடத்திட்டத்தின் அடிப்படையில் புதிய
அம்சங்களை சேர்த்து பாடதிட்டம் தயார் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில்
பாடப்புத்தகம் தயாரிக்கப்பட்டது. அவற்றை அச்சிட்டு வழங்க அரசிடம் அனுமதி
கேட்டு பள்ளிக் கல்வித்துறை விண்ணப்பித்து இருந்தது.
ஆனால், இதுவரை அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இதற்கிடையே மருத்துவ
படிப்புக்கான சேர்க்கையில் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று மத்திய அரசு
அறிவித்தது. அதனால் சிபிஎஸ்இக்கு இணையான பாடத்திட்டம் தேவை. அதன்
அடிப்படையில் சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்து வழங்க
தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது.
ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த பணி முடிய தாமதம் ஆனது. அதனால், அடுத்த
2018-2019ம் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய அரசு
முடிவு செய்தது. மேலும், மாநில பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து
முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் பள்ளிக்
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று
நடந்தது.
பொதுத்தேர்வு: பின்னர் அவர் நிருபர்களிடம்
கூறியதாவது: புதிய பாடத்திட்டம் கொண்டு வருவது தொடர்பாக கல்வியாளர்கள்,
கல்வி அதிகாரிகளுடன் கருத்து கேட்கப்பட்டது. தற்போது புதிய பாடத்திட்டம்
அறிமுகம் செய்ய முடியாதநிலை உள்ளதால் அடுத்த கல்வி ஆண்டில் அறிமுகம் செய்ய
ஆலோசித்து வருகிறோம்.
நீட் தேர்வை கருத்தில் கொண்டு மாணவர்களை அந்த தேர்வுக்கு தயார் செய்யும்
வகையில் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்துவது என்று
ஆலோசிக்கப்பட்டது. அடுத்த 3 ஆண்டுகளில் அந்த தேர்வு நடத்த நடவடிக்கை
எடுக்கப்படும். இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை
வெளியாக உள்ளது. மாணவர்களின் மன உளைச்சலை தவிர்க்க மாநில அளவிலான 1,2,3
என்ற ரேங்க் பட்டியல் வெளியாகாது.
அதற்கு பதிலாக அந்தந்த பள்ளிகளுக்கு மாணவர்களின் மதிப்பெண்கள் அனுப்பி
வைக்கப்படும். கடந்த ஆண்டுகளில் மாநில அளவில் தேர்ச்சி பெற்ற 1,2,3
இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு முதல்வர் கையால் பரிசுகள் வழங்கப்பட்டது.
அவை தற்போது தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கே வழங்கப்படும். பிளஸ் 2
வகுப்பு போலவே பத்தாம் வகுப்பு தேர்விலும் ரேங்க் பட்டியல் வெளியாகாது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழக அரசு ரேங்க் பட்டியல் வெளியாகாது என்று அறிவித்துள்ளது. ஆனால்
அதற்கு முக்கிய காரணமாக மாணவர்களின் மன உளைச்சலை தவிர்க்கத்தான் என்று
கூறியுள்ளது. ஆனால் உண்மையான காரணம் குறித்த தகவல்களை அரசு வெளியிடவில்லை.
* 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.
* மொபைல் போனில் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
* 1,2,3 என்ற ரேங்க் பட்டியல் இனி கிடையாது.
* சிறந்த மாணவர்கள் மட்டும் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
* மாணவர்கள் மன உளைச்சலை தவிர்க்கவே இந்த திடீர் முடிவு