‘மாதா, பிதா, குரு, தெய்வம்’.
‘எழுத்தறிவித்தவன் இறைவனாவான்’ போன்ற முதுமொழிகள் நமது நாட்டின் ஆசிரியர் -
மாணாக்கர்கள் இடையிலான நல்லுறவையும், நேசத்தையும் காலகாலமாக
புதுப்பித்தும் மெய்ப்பித்தும் வந்துள்ளன. முற்காலத்தில் குருகுல வாசம்
என்னும் கல்விமுறை தொடங்கி, பிற்காலத்தில் கிண்டர் கார்டன் பள்ளிமுறை வரை
ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் - மாணவ, மாணவியர்களுக்கும் இடையிலான பிணைப்பு
கடவுளுக்கும் பக்தர்களுக்கும் இடையிலான தெய்வீக பிணைப்பாக ஆத்மார்த்த உறவாக
வளர்ந்து வந்தது.வாழ்க்கையில் வெகு உயரமான இடத்துக்கு சென்று உன்னதமான வெற்றிபெற்ற ஒவ்வொரு
ஆண் - பெண்ணின் வாழ்விலும் அவர்களை செப்பனிட்டு, செதுக்கி, கல்வி என்னும்
நல்லறிவால் மெருகூட்டிய ஆசிரியப் பெருமக்களின் அயராத உழைப்பும் அவர்கள்
அளித்த ஊக்கமும் முதல்-முழு-மூலக் காரணியாக இருந்துள்ளது என்பதை யாராலும்
மறுக்கவோ, மறக்கவோ இயலாது.
அப்படிப்பட்ட ஆசிரியர் சமுதாயம் - இன்று கொலை பழியை சுமந்தும், தற்கொலைக்கு தூண்டியதாக குற்றச்சாட்டை ஏந்தியும் தலைகுனிந்து நிற்கும் நிலைமை இன்று மெல்ல, மெல்ல தோன்றத் தொடங்கியுள்ள துயர நிலையை ‘காலம் செய்த கோலம்’ என்றுதான் சொல்ல வேண்டும்.
குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் 4 சிறுமிகள் ஒரே கிணற்றில் விழுந்து தங்களது இன்னுயிரை போக்கிக்கொண்ட சம்பவத்தில் ஆசிரியர் பெருமக்களின் கண்டிப்பும் தண்டிப்பும்தான் காரணம் என்ற தகவல் வெகுவாக பரவிவரும் அதே வேளையில், கோவை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு மாண்டுள்ளான்.

அப்படிப்பட்ட ஆசிரியர் சமுதாயம் - இன்று கொலை பழியை சுமந்தும், தற்கொலைக்கு தூண்டியதாக குற்றச்சாட்டை ஏந்தியும் தலைகுனிந்து நிற்கும் நிலைமை இன்று மெல்ல, மெல்ல தோன்றத் தொடங்கியுள்ள துயர நிலையை ‘காலம் செய்த கோலம்’ என்றுதான் சொல்ல வேண்டும்.
குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் 4 சிறுமிகள் ஒரே கிணற்றில் விழுந்து தங்களது இன்னுயிரை போக்கிக்கொண்ட சம்பவத்தில் ஆசிரியர் பெருமக்களின் கண்டிப்பும் தண்டிப்பும்தான் காரணம் என்ற தகவல் வெகுவாக பரவிவரும் அதே வேளையில், கோவை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு மாண்டுள்ளான்.
அருள்செல்வம்
காஞ்சிபுரத்தில் படிக்கவில்லை என்று பெற்றோர் கண்டித்ததால் ஏழாம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான். சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தேர்வெழுதும்போது ‘பிட்’ அடித்ததாக பிடிபட்ட மாணவி ஹாஸ்டல் அறையில் தூக்கிட்டு இறந்துள்ளார்.
ஆக, இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் மட்டும் விலைமதிப்பில்லாத ஆறு மாணவச் செல்வங்களை - இந்த நாட்டின் வருங்காலத் தூண்களை நாம் பறிகொடுத்துள்ளோம். நமது குடும்பங்களில் நிகழாதவரை இந்த மரணங்கள் அனைத்துமே நமக்கு வெறும் செய்திதான். ஆனால், வேலூர் மாவட்டத்தில் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி இறந்த அந்த மாணவிகள் தங்களை பெற்றெடுத்த நான்கு கருப்பைகளுக்கு தீமூட்டிச் சென்ற வேதனையை நம்மில் எத்தனை பேரால் உணர முடியும்?
சகிப்புத்தன்மை, விடலை வயதுக்கே உரித்தான கோபம், ஆத்திரம், ஆவேசம், அவசர முடிவு உள்ளிட்ட உணர்ச்சிகளின் உந்துதலால் தற்கொலை என்னும் விபரீத முடிவை சில நொடிகளில் தேர்ந்தெடுக்கும் இத்தகைய பிள்ளைகளின் அகால மரணத்தை தவிர்க்கவும் - தடுக்கவும், நேர்வழிப்படுத்தவும் நமக்கு கடமை இல்லையா? என்ற விடைகாண இயலாத பெருங்கேள்வி நமது தொண்டையில் தொக்கிநின்று, விக்கித்து, திக்குமுக்காடச் செய்கிறது.
இப்படி நாடு முழுவதும் கல்விச் சுமை மற்றும் பள்ளி சார்ந்த சூழல் என்ற குற்றச்சாட்டுகளால் இந்நாட்டின் வருங்காலத் தூண்களான விலைமதிப்பற்ற மாணவச் செல்வங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது தற்போது அதிகரித்து வருகிறது.
இதன் பின்னணியாக ஆசிரியர் - ஆசிரியைகளின் கண்டிப்பு உள்ளதாக பரவலான குற்றச்சாட்டு பெருகிவரும் நிலையில் பள்ளி நாளின் ஆறு மணி நேரத்தை தங்களுடன் கழிக்கும் மாணவச் செல்வங்களின் இக்கால மனநிலையை புரிந்துகொள்ள அவர்கள் தவறி விட்டார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
காலை எழுந்ததும் படிப்பு, பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு என்பதுபோக - வீடியோ கேம்ஸ் மற்றும் கைபேசி விளையாட்டுகளுக்கு இடையூறாக பள்ளியும், பாடமும், ஆசிரியர்களும் உள்ளதாக சில பிள்ளைகளின் மனப்பாங்கு திரும்பிவரும் உளவியல் மாற்றத்தை நம்மில் பலரும் கவனிக்க தவறி விடுகிறோம்.
பக்கத்து வீட்டு பாஸ்கரைப் பார் - அடுத்த வீட்டு அன்ஷிகாவைப் பார் என போட்டி மனப்பான்மையில் தங்களது பிள்ளைகள் நல்லபடியாக படித்து, ஆளாகி, கை நிறையை சம்பாதிக்க வேண்டும் என வீட்டிலுள்ள பெற்றோர்கள் விரட்டுகின்றனர். ‘எங்கள் பள்ளியில் இந்த ஆண்டு அரசு தேர்வில் நூற்றுக்கு நூறு சதவீதம் மாணவர்கள் பாஸ்’ என்று மூலைக்கு மூலை விளம்பரம் செய்து மாணவர்கள் சேர்க்கையின் மூலம் வசூலை அள்ள பல தனியார் பள்ளிகள் முனைப்பு காட்டுகின்றன.
இந்த தாக்கம் அரசு பள்ளிகளிலும் மெதுவாக தொற்றியுள்ளது என்பதை சொல்லாமல் இருக்க முடியாது. அதிக தேர்ச்சியை அளித்த கல்வி மாவட்டம், கல்வி மண்டலம், பள்ளிக்கூடம் என்ற நற்பெயருக்காக சில அரசுப் பள்ளிகளும், ஆசிரியப் பெருமக்களும் மிகவும் பொறுப்புடன் பாடுபட்டு வருகின்றனர்.
இதன் எதிரொலி மாணவர்கள் மீதான அதீத அக்கறையாகவும், கட்டுப்பாடாகவும், கண்டிப்புகளாகவும், தண்டனையாகவும் உருமாறுகிறது. அவர்களின் எதிர்கால நலன்கருதி எடுக்கப்படும் சில முடிவுகள் பலரது முன்னிலையில் ஆசிரியர்கள் தங்களை இழிவுப்படுத்தி விட்டதாகவும், தலைகுனிவை ஏற்படுத்தி விட்டதாகவும் அறிவு முதிர்ச்சியடையாத மாணவ - மாணவிகளை சிந்திக்க வைக்கிறது.
இந்த விபரீத சிந்தனைக்கு ஒரே பரிகாரம் - தற்கொலைதான் என சில நொடிகளில் முட்டாள்தனமாக முடிவெடுக்கும் பிள்ளைகள் அடுத்த சில நிமிடங்களில் ஆவேசம் கலந்த துணிச்சலுடன் ஏதாவது ஒருவகையில் தங்களது விலை மதிப்பில்லாத உயிர்களை மாய்த்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில், பிரச்சனைகளை ஆசிரியர்கள் அணுகும் முறைகளில் காலஓட்டத்துக்கு தக்கவாறு சில மாற்றங்கள் தேவை என நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.
உதாரணமாக, தேர்வுகளின்போது ‘பிட்’ அடித்து சிக்கிக் கொள்ளும் மாணவ - மாணவியரை அறையை விட்டு வெளியேற்றுவது, பின்னர், இன்னும் பிறவகைகளை தண்டிப்பது, இதர மாணவர்கள் இடையே அவமானப்படுத்துவது போன்ற பழங்கால நடைமுறைகளில் இருந்து சற்று விலகி, காப்பி அடித்த மாணவியை கண்காணித்து அவரது விடைத்தாள் பிழை திருத்தத்துக்கு வரும்போது, பிடிபட்டவரின் பெற்றோரை வரவழைத்து ‘இந்த விடைகளை உங்கள் மகன் / மகள் எப்படி எழுதினார்? என்பது எங்களுக்கு தெரியும்.
இதற்கு நாங்கள் மதிப்பெண் அளிக்க முடியாது. உங்கள் மனம் நோகாத வகையில் ஒரு அவகாசமும், சில வெற்றுத்தாள்களையும் தருகிறோம். இப்போது எங்களது கேள்வித்தாளுக்கு அவர் எழுதும் விடைகளுக்கான மதிப்பெண்களை முழுமையாக வழங்க தயாராக இருக்கிறோம்’ என கூறும் புதிய பாணியும், மனப்பக்குவமும் உருவானால், அவமானம், ஆத்திரம், ஆவேசம், இவற்றின் உந்துதலான தற்கொலை எண்ணம் ஆகியவற்றில் இருந்து மாணவர்களை பாதுகாக்கலாம்.
இதுபோல், மாணவர்களின் தற்கால மனஓட்டத்துக்கு தக்கவாறு ஆசிரியர்களும் தங்களை புத்தாக்கம் செய்துகொள்ளும் இதர வழிகள் குறித்து ஆராய முற்பட வேண்டும்.
சமுதாயத்தின் பொறுப்புணர்வுமிக்க நன்மக்களை உருவாக்கும் ஆசிரியர் - ஆசிரியைகளின் கண்டிப்பு தொடர்பாக பள்ளிக்கு படை எடுத்து ஏக வசனத்தில் வசைமாரி பொழிந்து, மாணவர்களின் எதிரில் அவர்களை வெட்கித் தலைகுனிய வைக்கும் அநாகரிகமான செயல்களை பெற்றோரும் கைவிட வேண்டும்.
இதையும் தாண்டி பல்வேறு அறிவுரைகள் ஆசிரியர்கள் - மாணவர்களிடையிலான பந்தத்தையும், நல்லுறவையும் நெருக்கமாக்க உதவலாம். அந்த உத்திகளை சுட்டிக்காட்டும் அவசரத் தேவையும், அவசியமும், கடமையும் நம் அனைவருக்கும் உண்டு. குறிப்பாக, இவ்விவகாரத்தில் ஊடகங்களின் பங்களிப்பு அளப்பரியதாக அமைய வேண்டும் என்பது பரவலான எதிர்பார்ப்பாக உள்ளது.
அச்சு ஊடகங்களும், மின்னணு ஊடகங்களும் ஆவேசத்தில் தற்கொலைக்கு முயலுபவர்களை தடுக்கவும், தவிர்க்கவும் திருத்தவும் சில ஆய்வு கட்டுரைகளை வெளியிடலாம். அது பள்ளி - கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோருக்கு ஆறுதலாக அமையுமேயொழிய, மாணவ சமுதாயம் அந்த விழிப்புணர்வு கட்டுரைகளை கண்ணெடுத்துப் பார்த்து அதிலுள்ள கருத்துகளுக்கு செவி மடுக்குமா? என்பது சந்தேகம்தான்.
ஒளி ஊடகமான தொலைக்காட்சி வழியாக செய்தி தொகுப்புகள் மற்றும் தற்கொலை எண்ணத்துக்கு எதிரான விழிப்புணர்வு விவாத மேடை நிகழ்ச்சிகளை நடத்தியும் இந்த விபரீதத்தை தடுக்கலாம். ஆனால், அவை ஒளிபரப்பாகும் நேரத்தில் நமது வீட்டுப் பிள்ளைகள் ‘போர் அடிக்குதுப்பா - கழுத்தறுக்குறான்ய்யா’ என்று சேனலை மாற்றாமல் இருக்க வேண்டும்.
இந்த இரண்டு வாய்ப்பும் பலனளிக்க தவறும் வேளையில் வெகு பரவலான வீச்சுகொண்ட வெகுஜன ஊடகமான சினிமாத்துறை இந்த விவகாரத்தை கையில் எடுக்க துணிய வேண்டும்.
கல்வியின் மேன்மை, பள்ளிச் சூழல், பிள்ளைகளின் எதிர்காலத்தின்மீது பெற்றோர் வைத்திருக்கும் நியாயமான எதிர்பார்ப்பு. அந்த இலக்கை அவர்கள் அடைவதற்காக வாயைகட்டி, வயிற்றைகட்டி, தங்களது தேவைகளை சுருக்கிக்கொண்டு பெற்றோர் செய்யும் தியாகங்கள், ஆசிரியர் - மாணவர் இடையிலான பக்தி, அன்பு, அக்கறை ஆகியவற்றை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான ‘அப்பா’, ‘சாட்டை’ போன்ற சமுதாய நன்னோக்கு கொண்ட படங்கள் அதிகமாக வர வேண்டும்.
ஒருவேளை, இதுபோன்ற ‘ரா மேஸேஜ்’ கதையம்சம் கொண்ட படங்கள் சில திரைப்பட விழாக்களில் பங்கேற்ற பின்னர் பெரிதாக கவனிக்கப்படாமல் போகலாம் என்ற அச்சமும், எண்ணமும் பரவலாக உள்ள நிலையில், பிரபல முன்னணி கதாநாயகர்களின் படங்களில் இதுதொடர்பான சிறு மெஸேஜ்கள் புகுத்தப்படலாம்.
அது வருங்கால இளம்தலைமுறையினரை தற்கொலை முடிவில் இருந்து தடுத்தாண்டு, காப்பாற்றுவதுடன், எதிர்காலத்தில் இந்த நாயகர்கள் ஆரம்பிக்கும் அரசியல் கட்சிகளின் ஓட்டுவங்கிக்கான தற்போதையை வைப்புநிதி என்பதை உறுதியாக கூறலாம்.