மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்க, திறனறி தேர்வுகள் நடத்தப் படுகின்றன. தேசிய அளவில் நடக்கும் இந்த தேர்வுகளில், தமிழக மாணவர்கள் பின்தங்கி உள்ளனர். இந்த நிலைமையை மாற்ற, தமிழக அரசின் சார்பில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தலைமையில் நடந்த கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு, 2.93 கோடி ரூபாய் ஒதுக்கி, முதன்மை செயலர், பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார். திட்டத்தை அமல்படுத்தும் பணிகளை துவங்குமாறு, தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம், பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார். மாநிலம் முழுவதும், போட்டி தேர்வு பயிற்சிக்கு, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட, 500 மையங்களும், தொடக்கப் பள்ளிகளில் அமைக்கப்படும், 3,000, 'ஸ்மார்ட்' வகுப்புகளும், திறனறி தேர்வு பயிற்சி மையங்களாக செயல்பட உள்ளன.
இதற்காக, தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. இந்த திட்டம், விரைவில் அமலுக்கு வர உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
புது முயற்சி : திறனறி தேர்வுக்கான இலவச பயிற்சி, இணையதளத்தில், 'யூ டியூப் லிங்க்' வழியாகவும் வழங்கப்பட உள்ளது. இதற்காக, தொடக்க கல்வித்துறை சார்பில், புதிய இணையதளம் துவங்கப்பட உள்ளது. அதில், முந்தைய தேர்வுகளின் வினாத்தொகுப்புகள், விடைக்குறிப்புகள் இடம்பெறும். 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில், திறனறி தேர்வுக்கான கையேடுகள் வழங்கப்படும். திறன் தேர்வில் அனுபவம் உள்ள ஆசிரியர்களுக்கு, இலவச பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இந்த புதிய முயற்சியை, தொடக்க கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.








