மருத்துவக் கல்லுாரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வு எழுவதுபோல, வெளிநாட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் படிக்கவும், நீட் தேர்வு நடத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சிலுக்குமாற்றாக, தேசிய மருத்துவ கமிஷன் கொண்டு வருவதற்கான மசோதாவை பார்லிமென்டில், மத்திய அரசு தாக்கல் செய்தது. ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்போர், ஒரு குறிப்பிட்ட தேர்வு எழுதி, அலோபதி டாக்டர்களாக செயல்பட அனுமதிப்பது உள்ளிட்டவை இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பார்லி.,யிலும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த மசோதா, நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மசோதா குறித்த விளக்கங்கள், மத்தியசுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அதில், 'டாக்டர்களுக்கான பற்றாக்குறையை குறைக்கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்வு நடத்துவது தொடர்பான குழுவில், அலோபதி டாக்டர்களும் இருப்பர். அதனால், இதில் எந்த பிரச்னையும் ஏற்படாது' என, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.








