தொழிலாளர்களின் பிஎப் கணக்கில் உள்ள பணத்துக்கு ஆண்டுதோறும் வட்டி வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2016-17 நிதியாண்டில் வட்டியாக 8.65 சதவீதம்
வழங்கப்பட்டு வந்தது. பிஎப் பணம் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டு
வருகிறது.
இதுவரை சுமார் 44,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கிடைத்த லாபம்
தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. பங்கு முதலீட்டில்
லாபம் கிடைத்தாலும், கடன் பத்திரங்கள் உள்ளிட்ட பிற முதலீடுகளில் குறைந்த
அளவு லாபமே கிடைத்ததால் வட்டியை குறைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாக தகவல்கள்
ஏற்கெனவே வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், பிஎப் வட்டி நடப்பு ஆண்டில் குறைய வாய்ப்பில்லை என
கூறப்படுகிறது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: வரும்
21ம் தேதி பிஎப் அறக்கட்டளை வாரிய கூட்டம் நடக்கிறது. அப்போது நடப்பு
நிதியாண்டுக்கான வட்டி விகிதம் முடிவு செய்யப்பட உள்ளது. பிஎப் நிறுவனம்
ரூ.2,886 கோடி மதிப்பிலான பங்குகளை இந்த மாத துவக்கத்தில் விற்றுள்ளது.
பழைய வட்டி விகிதமே நீடிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆண்டிலும் 8.65 சதவீத வட்டியே நீடிக்க வாய்ப்புகள் உள்ளன
என்றனர். 2015-16 நிதியாண்டில் வட்டியாக 8.8 சதவீதம் வழங்கப்பட்டது.