தமிழக அரசு சார்பில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில், முதல்வர் தலைமையில், கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு நடைபெறும். மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டில், முதல் நாள், கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டு கூட்டம் நடத்தப்படும்.
விபரங்கள்
இரண்டாம் நாள், கலெக்டர்களுக்கான கூட்டம்; மூன்றாம் நாள், காவல் துறை அதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெறும்.இம்மாநாட்டில், கலெக்டர்கள், தங்கள் மாவட்டத்தின் தேவைகளை பட்டியலிடுவர். மாவட்டத்தில் செயல்படுத்தப்படும், அரசு திட்டங்களின் செயல்பாடு குறித்த விபரங்களையும் எடுத்துரைப்பர்.
காவல் துறை அதிகாரிகள், மாவட்டத்தில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை எவ்வாறு உள்ளது; அமைதி நிலவ என்ன தேவை என்பதை வலியுறுத்துவர். மேலும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் எடுத்துரைப்பர்.
அரசியல் மாற்றங்கள்
தலைமை செயலர், துறை செயலர்கள் மற்றும் உயரதிகாரிகள், அவற்றை குறிப்பெடுப்பர். மாநாடு நிறைவு நாளில், மாவட்டங்களுக்கு பிரத்யேக திட்டங்களை, முதல்வர் அறிவிப்பார். சிறப்பாக செயல்பட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு, கேடயம் வழங்கி பாராட்டுவார்.இம்மாநாடு, அனைத்து மாவட்டங்களின் நிலவரத்தை, ஆட்சியாளர்கள் அறிய, பெரிதும் உதவியாக இருக்கும். 2011ல், அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், 2013 வரை, முறையாக கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு நடந்தது.
கடந்த, 2014ல், ஜெ., முதல்வர் பதவியை இழக்க நேரிட்டதால், பன்னீர்செல்வம் முதல்வரானார். அவர், அந்த ஆண்டு, கலெக்டர்கள் மாநாட்டை நடத்தவில்லை. அதன்பின், முதல்வரான ஜெயலலிதாவும் மாநாட்டை நடத்தவில்லை.கடந்த, 2016 தேர்தலில், அ.தி.மு.க., மீண்டும் வெற்றி பெற்றது. ஜெ., மரணம் காரணமாக, பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன.
தற்போது, முதல்வராக உள்ள பழனிசாமி, முதன்முறையாக, நாளை முதல், மூன்று நாட்களுக்கு, கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளார்.சென்னை, தலைமை செயலகத்தில், நாளை, மாநாடு துவங்குகிறது. முதல் நாளில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த கூட்டம் நடக்கிறது. 6ல், மாவட்ட கலெக்டர்கள் கூட்டம்; 7ல், காவல் துறை அதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெறும்.
எதிர்க்கட்சிகள்
'பழனிசாமி அரசு, எந்த நேரத்திலும் கவிழ்ந்து விடும்' என, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில், அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை தெரியப்படுத்தவும், அரசு திட்டங்களை முடுக்கி விடவும், கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாட்டை, ஆளும் அரசு கூட்டியுள்ளது.
இது குறித்து, கோட்டை வட்டாரங்கள் கூறியதாவது:சமீபத்தில், அனைத்து மாவட்டங்களிலும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதில், முதல்வர் பழனிசாமி பங்கேற்று, பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அவற்றின் செயல்பாடு, எந்தளவில் உள்ளது என, கலெக்டர்கள் மாநாட்டில், முதல்வர் கேட்டறிய உள்ளார்.
முழு வீச்சில்நிலத்தடி நீர்மட்டம், கோடையில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிப்பது எப்படி என்பது குறித்தும், கலெக்டர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பின், மாநாடு நடைபெற உள்ளதால், அதிகாரிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.








