நகராட்சி உயர்நிலைப் பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். உடன் அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், பென்ஜமின்.
தமிழக மாணவர்களை உலகளவில் சிறந்த மாணவர்களாக உருவாக்குவோம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
அம்பத்தூர் சோழபுரத்தில் ரூ. 1 கோடியே 61 லட்சத்தில் கட்டப்பட்ட நகராட்சி
உயர்நிலைப் பள்ளிக் கட்டடத்தை பள்ளி கல்வித் துறை அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
இப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
இக்கோரிக்கை ஏற்கப்பட்டு, வரும் கல்வியாண்டில் முதல்வர் எடப்பாடி
பழனிசாமியின் ஒப்புதலோடு மேல்நிலைப் பள்ளியாகச் செயல்படும் என தெரிவித்துக்
கொள்கிறேன்.
சட்டப்பேரவை உறுப்பினர்களும், அமைச்சர்களும் தங்களது கோரிக்கைகளை தங்கள்
பகுதிக்கு வரும்போது தெரிவித்து ஒப்புதல் வாங்கிக் கொள்கின்றனர். அதேபோல்
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆவடி தொகுதிக்குரிய
கோரிக்கைகளை வைத்தார்.
அவரது கோரிக்கையும் ஏற்கப்படும். இன்றைய மாணவர்கள் நாளைய கல்வியாளராக
வேண்டும் என எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் விரும்பினர். அதை நிறைவேற்றும்
விதமாக அரசு பல்வேறு திட்டங்களை கல்வித் துறையில் செயல்படுத்தி வருகிறது.
தமிழக மாணவர்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில்
'நீட்' தேர்வுக்காக 9 பயிற்சி மையங்களைத் திறந்து, 3,118 மாணவர்களுக்கு
பயிற்சிஅளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள்,
மடிக்கணினி உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் வழங்கி வருகிறோம்.
இதன்மூலம் வரும் கல்வியாண்டில் அரசு அளித்த பயிற்சியால் 1,000 மாணவர்கள்
தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேருவர். வரும் கல்வியாண்டில் 9,
10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டம்
வகுத்துள்ளோம். அதற்கான புதிய இணையதளத்தை உருவாக்கி , இந்தியாவிலேயே
திறமையான மாணவர்கள் தமிழக மாணவர்கள் என்ற நிலையை உருவாக்குவோம்.
தமிழக மாணவர்களை உலகளவில் சிறந்த மாணவர்களாக உருவாக்குவோம். தனியார் பள்ளி
சிறந்த பள்ளி என்ற வாதத்தை முறியடித்து , அரசுப் பள்ளி மாணவர்கள்
திறமைசாலிகள் என்ற நிலையை உருவாக்குவோம். பள்ளி சீருடையைக் கூட தனியார்
பள்ளி சீருடையைவிட தரமானதாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பாண்டியராஜன், பென்ஜமின், முன்னாள் அமைச்சர்
ரமணா, மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, பகுதி செயலாளர் அய்யனார், மாவட்டப்
பிரதிநிதி கே.பி.முகுந்தன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.