முருகன்: இந்த கோடையில் பலருக்கும் இருக்கும் முக்கிய பிரச்னை, வியர்த்து வியர்த்து, சளி பிடிப்பது தான். வியர்வை தொந்தரவால் ஏற்படும் சளியை பொறுத்தவரை, நம் உடலில் சூடும் அதிகரித்து விடக் கூடாது.
அதேசமயம், வியர்வை நீரின் தொந்தரவில் இருந்தும் விடுபட வேண்டும். ஆகவே, கவனத்துடன் இதற்கான சில நிவாரணிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வியர்வை சளி தொந்தரவால் அவதிப்படுவோர், தங்களின் கைக்குட்டையின் நுனிப் பகுதியில் சிறிதளவு வால் மிளகு, அன்னாசிப்பூ, பச்சைக் கற்பூரம் என, இந்த மூன்றையும் பொடித்து, சிறிய மூட்டை போல கட்டிக் கொள்ளலாம்.
அந்த கைக்குட்டையை அடிக்கடி எடுத்து நுகர்ந்தால், மூக்கு ஒழுகுதல், தலைவலி, தும்மல் உள்ளிட்டவை சரியாகும்.
அரை டீஸ்பூன் ஏலக்காய் விதையைப் பொடித்து, தேனுடன் கலந்து காலை, மாலை என, இரு வேளை சாப்பிடலாம். இதனால், உங்கள் உடலில் வெப்பம் அதிகமாகாது; அதேசமயம் சளித் தொந்தரவிலிருந்தும் விடுபடலாம்.
மேலும், 1 லிட்டர் தண்ணீருக்கு, மூன்று அன்னாசிப்பூ என்ற விகிதத்தில் எடுத்து, அதை ஒன்றிரண்டாக பொடித்து, தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து, தாகம் எடுக்கும் போது பருகலாம்.
அடுக்குத் தும்மல், மூக்கடைப்பு, தொண்டைக் கம்மல் உள்ளிட்டவற்றுக்கு தீர்வு கிடைக்கும்.
அதிமதுரப் பொடியை தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுப்பதால், தொண்டைக் கம்மல் உள்ளிட்டவை சரியாகும். உடலில் வெப்பமும் சம நிலையில் இருக்கும்; வாய்ப்புண், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும்.
ஆடாதோடை இலையின் சாற்றை ஒரு டீஸ்பூன் எடுத்து, அதனுடன் தேன் கலந்து காலை, மாலை சாப்பிட்டால், இருமலும், ஆஸ்துமாவும் குணமாகும். 'ஆடாதோடை மணப்பாகு அல்லது வாஸா பானகம்' என்ற பெயரில், சித்த, ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதை, மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளலாம்.
வியர்வை சளியால் அவதியுறுவோருக்கு முக்கிய உணவு, தினை. இதை கஞ்சியாகவோ, வேறு விதத்திலோ சமைத்து சாப்பிடலாம்.
உடலுக்கு சக்தியை கொடுத்து, அதேசமயம் கபம், இருமல், தும்மல் உள்ளிட்டவற்றை தினையானது கட்டுப்படுத்தும். கோடை காலத்தில் உடல் சக்தியற்று அவதிப்படுவோருக்கு, தினை ஒரு வரப்பிரசாதம்.
ஒரு இடம் விட்டு மற்றொரு இடத்தில், புதிய தண்ணீர் பருகுவதால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்தும், வியர்வை சளியில் இருந்து விடுபடவும், விரலி மஞ்சளை அரைத்து, அரிசி கழுவிய தண்ணீருடன் கலந்து, தேன் சேர்த்து சாப்பிடலாம்.
மஞ்சளை சுட்டு அதன் புகையை நுகர்ந்தாலும், மூக்கடைப்பு, தும்மல், மூக்கு ஒழுகுதல் உள்ளிட்டவைசரியாகும்.