
இன்றைய நவீன உலகின் வயர்லெஸ் தொழில்நுட்பத்தை ஏர்-பாட் வாயிலாக ஆப்பிள்
நிறுவனம் 2016ஆம் ஆண்டு முதல் முதலாக உலகிற்கு அறிமுகம் செய்தது. அப்போது
அந்நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளரான ஜானி இவ், இந்தக் கண்டுபிடிப்பே
வயர்லெஸ் எதிர்காலத்தின் முன்னோடியாக இருக்கும் என்று
குறிப்பிட்டிருந்தார். 2018ஆம் ஆண்டுக்குள் வயரின்றி சார்ஜ் செய்யும் `ஏர்
பவர் சார்ஜர்' தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும் என்று ஆப்பிள் நிறுவனம்
அறிவித்திருந்தது. இது வெளியாகும் முன்பே இதன் அடுத்த கட்டத்துக்கான
முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் அடைந்துள்ளது.

ஒரு கருவியிலிருந்து மற்றொரு கருவிக்கு வயரின் துணையின்றி சார்ஜை கடத்தும்
சோதனையில் ஆப்பிள் நிறுவனம் வெற்றியடைந்ததையடுத்து; தற்போது இதற்கான
காப்புரிமைக்காக அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்துள்ளது. இது அறிமுகமாகும்
பட்சத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பாடு அல்லது மேக் புக்கைக் கொண்டு
ஐ-போன் மற்றும் ஆப்பிள் வாட்ச்சை வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் சார்ஜ் செய்து
கொள்ள முடியும். இதில் `Multiple' ஆப்சன் இருப்பதால் ஒரே சமயத்தில்
ஒன்றுக்கும் மேற்பட்ட கருவிகளையும் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதன் மூலம்
ஆப்பிள் பயனர்கள், பயணத்தின் போது சார்ஜர்கள்; பவர் பேங்க்களை உடன்
எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
இது எப்படி வேலை செய்கிறது?
காப்புரிமைக்காக விண்ணப்பித்துள்ள அறிக்கையில் ஆப்பிள் நிறுவனம்,
இத்திட்டம் குறித்த வரைபடத்தையும் சமர்ப்பித்துள்ளது. அந்தத் திட்ட
வரைபடத்தின்படி, ஆப்பிள் ஐ-பாடின் ஸ்க்ரீனின் முன்பக்கத்தில் மூன்று
ஸ்லாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே ஒரு கருவியிருந்து மற்றொரு கருவிக்கு
மின்சாரத்தைக் கடத்தும் புள்ளியாகும். இந்தப் புள்ளியில் ஐ-போன்; ஐ-வாட்சை
வைப்பதன் மூலம் அதிலிருந்து வரும் மின்னலைகள் மூலம் அவை சார்ஜ் ஆகிறது.