நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகும் ஆசிரியர்களுக்கு வீடு,
மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சலுகைகளை தமிழக அரசு வழங்க
வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து தமிழக
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் இரா.தாஸ் கூறியதாவது:
மத்திய அரசு விருது வழங்கும் போது ரொக்கம் ₹50 ஆயிரம் வழங்குகிறது. ரயில்
பயண கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்குகிறது. மேலும் விருது பெற்ற
ஆசிரியரின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தியுள்ளது. அதைப் பின்பற்றி
ராஜஸ்தானில், விருது பெற்ற ஆசிரியர்கள் அவர்கள் பணியாற்றும் பள்ளிகளின்
அருகில் ஒரு கிமீ தொலைவில் குடியிருப்பு, வழங்கி வருகிறது.
அதுபோல தமிழக அரசும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்களுக்கு
சலுகைகள் வழங்க வேண்டும். குறிப்பாக மலைப் பகுதியில் சிறப்பாக பணியாற்றும்
ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு ஏதாவது செய்ய வேண்டும்.
மேலும், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ₹2
லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்குகிறது. அதேபோல தமிழக அரசும் வழங்க
வேண்டும்.