தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்காக உச்சநீதிமன்றம் விதித்துள்ள உத்தரவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலான நேரம் வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குள் ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் கீழ் 6 மாதம் ஜெயில் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்தும் விதிக்கப்படும். 18 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிக அளவில் பட்டாசு வெடிப்பார்கள். அவர்களுக்கு அறிவுரை வழங்கி கோர்ட்டு தீர்ப்பு அமல்படுத்தப்படும்.
அனுமதியை மீறி பட்டாசு வெடிப்பவர்களை முதலில் எச்சரிக்கவும் தொடர்ந்து வெடித்தால் நடவடிக்கை எடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளார்கள்.








