சாதாரண நாட்களில் விற்பனையாவதைவிட உணவும் உணவு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும் பண்டிகை நாட்களில் அதிகம் விற்பனையாகின்றன. ஆகவே விழாக்கால நாட்களில் பல்வேறுவிதமான உணவு தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்யும்போது தரமற்றவற்றையும் கலந்து விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்புக்கள் உண்டு.
எதிர்வரும் 06.11.18 - அன்று தீப ஒளித்திருநாள் தேசம் முழுவதும் கொண்டாடப்படுவதை ஒட்டி, மக்கள் தங்கள் வீடுகளில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பதற்காக பல்வேறு மளிகைப் பொருட்களை வாங்கிவருகின்றனர். அப்படி வாங்கப்படும் மளிகைப் பொருட்கள் தரமானதாக இருப்பதின்மூலம், தங்கள் இல்லத்தில் உள்ள அனைவரின் உடல் நலத்தை பாதுகாத்திடுவதும் அதன் வழியே தேவையற்ற நோய் பாதிப்புகளிலிருந்து தம்மையும் தம்முடைய குடும்பத்தாரையும் பாதுகாத்துக்கொள்ளுவதும் ஒவ்வொருவரின் கடமையாகும்.
தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சிலவற்றை குறித்து பார்ப்போம்.
*எண்னெய்*
பலகாரம் தயரிக்க மிகத் தேவையான ஒன்று எண்ணெயாகும். அது எந்தவிதமான எண்ணெயானாலும் அதனை வாங்கும்போது சரியாக பார்த்து வாங்க வேண்டும். அடைக்கப்பட்ட பாக்கெட்டுகளில், பாட்டில்களில் விற்கப்படும் எண்ணெய்களை வாங்கும்போது, அந்த பாக்கெட்டுகளின் மேல் அச்சடிக்கப்பட்ட விபரங்களை பார்த்து வாங்கவேண்டும். ஏனெனில், சில பாக்கெட்டுகளில் மிகச் சிறிய எழுத்தில் “ வெளி உபயோகத்திற்கு மட்டும், பூஜைக்காக மட்டும், விளக்கு எரிக்க “ என்பதுபோன்றவற்றை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ அச்சடித்திருப்பார்கள், அதேபோல் மக்கள் ஏமாறுவது தங்களுக்கே தெரியாத வகையில் பல்வேறு வேலைகளை செய்திருப்பார்கள்.எனவே அடைக்கப்பட்ட எண்ணெய் வாங்கும்போது சரியாக பார்த்து வாங்கவேண்டும். அதே நேரம் சில்லரையில் வாங்கும்போது நம்பிக்கையான மற்றும் உணவு பாதுகாப்புத்துறையில் உரிமம் பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்..
*நெய்*
நெய்யை பொருத்தவரை பல்வேறு ஏமாற்றும் வேலைகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. வழக்கமாக பசு அல்லது எருமை மாட்டு பாலிலிருந்து தயாரிக்கப்படுவதே நெய்யாகும். ஆனால், செயற்கையான நிறமூட்டிகள், வாசனையூட்டிகள் மற்றும் பல்வேறு மூலப்பொருட்டளைக் கொண்டு கரூர் நெய் என்ற பெயரிலும் அல்லது பாத்திரங்களில் வைத்து நெய் அல்லாத ஒன்றை நெய்யெனக் கூறி விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத் துறை முயன்றால், அடைக்கப்பட்ட பாக்கெட்டுகளின் மீது “ பூஜைக்காக மட்டும், விளக்கு எரிக்க மட்டும் “ என அச்சடிக்கப்பட்டுள்ளதைக் காட்டி கடைக்காரர்கள் தப்பித்து விடுகின்றனர். சில்லறையில் ( லூசில் ) நெய் விற்பனை கூடாதென்றபோதும், இது விளக்கு எரிக்க மட்டும் விற்பனை செய்கின்றோம் என கடைக்காரர்கள் கூறுவதாலும், வாங்கி பயன்படுத்தும் உபயோகிப்பாளர்கள் நேரிடையாக சாட்சியத்துடன் / பில்களுடன் புகார் செய்திட மறுப்பதாலும் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுப்பது சாத்தியமற்று உள்ளது. எனவே வீட்டு சமையல் / சாப்பட்டிற்காக நெய் வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
*உப்பு*
குழந்தைகளின் அறிவுக் கூர்மைக்கும், கருச்சிதைவை தடுக்கவும், முன் கழுத்து கழலை நோயை தடுக்கவும் இன்னும் பல்வேறு நோய்களைத் தவிர்க்க அயோடின் மிக அத்தியாவசியமானது. அயோடின் கலக்காத உப்பை மனித உணவுக்காக விற்பனை செய்யக்கூடாது என உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்னயச் சட்டம் கூறியுள்ளது. எனவே உப்பு வாங்கும்போது அயோடின் கலக்காத உப்பை வாங்கி பயன்படுத்த வேண்டாம்.
*கடலை மாவு*
தமிழகத்தின் பலகாரங்களில் கடலைமாவு முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. நேரம் இல்லாத சூழலில் கடலை பருப்பு வாங்கி காயவைத்து அறைத்து பயன்படுத்தும் வழக்கம் குறைந்துள்ள நிலையில், தயாரிக்கப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்படும் கடலை மாவில் விலை குறைந்த அரிசி மாவு மற்றும் பட்டாணி மாவு கலந்து விற்பனை செய்திட வாய்ப்பு இருப்பதால் , நம்பிக்கையான மற்றும் உணவு பாதுகாப்புத்துறையிடம் உரிமம் பெற்றுள்ள கடைகளில் மட்டும் கடலை மாவு வாங்கிட வேண்டும்.
*மளிகை மற்றும் இதர பொருட்கள்*
உணவு தயாரிக்க பயன்படும் எந்த பொருளாக இருந்தாலும் அது அடைக்கப்பட்ட நிலையில் இருந்தால், அந்த பாக்கெட்டுகள்மீது அந்த பொருளை தயாரித்த, மறு பொட்டலமிட்ட, இறக்குமதி செய்து விற்பனை செய்கின்ற நிறுவனத்தின் முழு முகவரி , தயாரித்த தேதி, காலாவதியாகும் தேதி, சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள், சைவமா அல்லது அசைவமா, உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் / பதிவு சான்று ( fssai ) எண், ,தயாரித்த பேட்ஜ் எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் உள்ளதா என்பதை பார்த்து வாங்கவேண்டும். அதிலும் குறிப்பாக நீங்கள் எந்த கடையில் வாங்குகின்றீரோ அல்லது சாப்பிடுகின்றீரோ அந்த கடை / உணவு விற்பனை நிறுவனம் உணவு பாதுகாப்புத்துறையிடம் சான்றுபெற்றதா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். ஏன்னெனில் ஏதாவது குறை இருப்பின் நடவடிக்கை எடுப்பது எளிதாக இருக்கும்.
*உணவகங்களில்....*
பண்டிகை தினங்களுக்கு முன்னரும் அதனை ஒட்டியும் குடும்பத்தோடு உணவகங்களுக்கு சென்று சாப்பிடுவது தற்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. பெரிய வ்ணவகமாக இருந்தாலும் சாலையோரம் அமைந்துள்ள உணவு விற்பனை நிறுவனங்களாக இருந்தாலும் அடிப்படை வசதி, சுகாதாரம் மற்றும் குறைந்தபட்சம் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் இடங்களில் மட்டும் உணவு உண்ண வேண்டும். சமையலறையை ஒழுங்காக பராமரிக்காத, தன் சுத்தத்தை பராமரிக்காத வேலை செய்திடும் பணியாளர்களைக் கொண்டுள்ள எந்த உணவு விற்பனையகங்களிலும் சாப்பிடுவது தேவையற்ற வியாதிகளை கொண்டுவந்து சேர்க்கும். உணவகங்களும் உணவு பாதுகாப்புத்துறையிடம் உரிமம் / பதிவுச் சான்று பெற்றுள்ளதா என்பதை உறுதிசெய்த பின்னர் சாப்பிடுவதே உத்தமம்.
*இறுதியாக...*
தமிழகத்தில் பணிசெய்துவரும் நேர்மையான அதிகாரிகளில் ஒருவரான திருமதி பி.அமுதா, இ.ஆ.ப. அவர்கள் தமிழ்நாட்டின் மாநில உணவு பாதுகாப்பு ஆணையராக பொறுப்பேற்ற பின்னர், இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வசதியாக தொலைபேசி எண்ணை அறிவித்து அதில் புகார்கள் பெறப்பட்டு உடனுக்குடன் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் நடவடிக்கை எடுக்கப்படுவருகின்றது. எனவே வாங்கும் உணவுப் பொருட்களில் சந்தேகம் இருந்தால் / சாப்பிடும் உணவகங்களில் குறைகள் இருந்தால், விதிமீறல்கள் இருந்தால் இன்னும் கூற வேண்டுமெனில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மீது குறைகள் இருந்தாலும், மாநிலத்தின் எந்த மூலமுடுக்கிலிருந்தும், மாநில உணவு பாதுகாப்பு ஆணையருக்கு *9444042322* என்ற எண்ணில் வாட்ச்அப்பில் அல்லது சாதாரண வகையில் பேசியோ அல்லது குறுஞ்செய்தி வழியாகவோ புகார் அளிக்கலாம். புகார் தெரிவிப்பவர் விபரம் ரகசியம் பாதுகாக்கப்படுவதோடு, உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
*உணவு பாதுகாப்பு - உயிர் பாதுகாப்பு....*
*பண்டிகைகளைக் கொண்டாடுவோம் ;* *பாதுகாப்பான உணவுகளோடு*
*கட்டுரையாளர் - உணவு பாதுகாப்பு அலுவலர்*
*நன்றி - தீக்கதிர் - வண்ணக்கதிர்*🙏🙏🙏








