உண்ணாவிரத போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுடன், அதிகாரிகள் நடத்திய பேச்சு
தோல்வி அடைந்தது.அடிப்படை ஊதியத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்க கோரி,
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர், 25ம் தேதி காலை முதல்,
சென்னையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலில், எழும்பூர்,
ராஜரத்தினம் மைதானத்தில் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து, டி.பி.ஐ.,
வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க., தலைவர், ஸ்டாலின், அ.ம.மு.க., துணை பொதுச்செயலர், தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன் உள்ளிட்ட, அரசியல் கட்சி தலைவர்கள், டி.பி.ஐ., வளாகத்திற்கு சென்று, ஆசிரியர் சங்க நிர்வாகிகளை சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர்.ஆசிரியர்களின் போராட்டம், அரசியல் கட்சிகளின் ஆதரவு போராட்டமாக மாறியதை அடுத்து, சங்க நிர்வாகிகளிடம், அரசு தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி பேச்சு நடத்தினார். பின், பள்ளிக் கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பேச்சு நடத்தினார். இதில், உடன்பாடு எட்டவில்லை. அதனால், போராட்டம் தொடரும் என, சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்







