ஒரு தலைமுறைக் கடந்துவிட்டோம். யூகேஜி, எல்கேஜி, பிரீகேஜி என்ற பெயரில் கிண்டர் கார்டன் வகுப்புகளை தொடங்கி, மழலையர் பள்ளிக்கூடங்களின் வழியாக, மாணவர்களின் சிந்தனைக்கு சவக்குழி தோண்டத் தொடங்கி, ஒரு தலைமுறை கடந்துவிட்டோம். ஆனாலும் இன்னும் கல்விப் பற்றியப் புரிதல் யாருக்கும் வந்ததாக தெரியவில்லை. கல்வியின் பயன் என்ன? சிந்தனாவாதிகளை உருவாக்குவதா அல்லது செக்குமாடுகளை உருவாக்குவதா? என்ற கேள்வியை எழுப்பினால், பதில் மட்டும் ஒருவரிடம் இருந்தும் வருவதில்லை.
என் அன்பானப் பெற்றோரே..
உங்களது குழந்தைகள் படிக்கின்ற பள்ளிகளுக்குச் சென்று, ஒருநாள் முழுவதுமாக அவர்களின் நடவடிக்கைகளைக் கவனித்தது உண்டா? குறிப்பாக இந்தக் கேஜி வகுப்பறை அளப்பறைகளைக் கொஞ்சம் உற்று கவனியுங்கள்..
கார்ப்பரேட் உலகிற்குத் தேவையான மனித எந்திரங்களை உருவாக்குவதே அவர்களின் தலையாயக் கடமைப் போல, செக்குமாடு உற்பத்தியைச் செம்மையாகச் செய்கின்றனர்.
தேடலும், அத்துமீரலும், தடையற்ற சுதந்திரமும்தான் ஒரு குழந்தையின் உலகமாக எப்பொழுதும் இருக்கும். இம்மூன்றின் மீதும் பெரும் தாக்குதல் நடக்கும் இடமே இந்த கேஜி வகுப்பறைகள். இந்த கேஜி வகுப்பறைகளை வியாபார நோக்கிற்காக தனியார் பள்ளிகளில் தொடங்கினர் என்றால் அதனையே இன்று அரசும் செய்வதென முடிவெடுத்ததன் நோக்கம் என்ன? அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் என்ன? இந்த வகுப்புகள் இல்லாதக் காலத்தில், யாரும் கல்வியே கற்கவில்லையா? ஐயா அப்துல் கலாம் எந்த கேஜி வகுப்பறையில் கற்றார்? கேஜியில் படித்து எத்தனை அப்துல் கலாம்கள் இதுவரை உருவாகினர்?
ஒரு பள்ளியில் நுழைந்தது முதல் பள்ளியைவிட்டு வெளியேறும் இறுதி நிமிடம் வரை, குழந்தைகளைக் கட்டுபாடுகளால் நசுக்குவது என்பது எவ்விதத்திலும் பயனளிக்காது. இது உளவியலாகவே அடிமை மனப்பான்மையினைத்தான் உருவாக்கும்.
ஒரு நாய்க்கு, ஒவ்வொருமுறை உணவு வைக்கும் முன்னரும், அதன் எஜமானி ஒரு மணியை அடித்து, ஒலி எழுப்புவதை ஒரு நடைமுறையாக பின்பற்றி வந்தார். சிறிது காலம் கழித்து, எங்கேனும் மணி அடித்தாலே, அந்நாயின் வாயில் எச்சில் ஊறியதை ஆய்வின் மூலமாக நிரூபித்தார். அக்கதை இப்பொழுது இந்த கேஜி வகுப்பறை குழந்தைகளுக்கும் பொருந்தும். ஏனெனில் இவர்கள் பயிற்றுவிக்கப்பட்ட கற்பனைத் திறனில்லா, உண்மைகளைப் பிரித்தறியும் ஆற்றலற்ற விலங்குகளுக்கு ஒப்பானவர்களே!
ஓடியாடி எல்லையில்லா சுதந்திரத்தோடு வாழ வேண்டிய வயதில், நேராக நட, வாயில் விரல் வை, பேசாதே என்றெல்லாம் கட்டுபாடுகளை திணித்து, போட்டி நிறைந்த உலகிற்கு எப்பொழும் தயாராக இருக்கும் ஒரு போட்டியாளனைப் போல, உருவாக்கியப்பின் எப்படி ஒரு குழந்தையின் கற்பனைத் திறன் வளரும்?.
கற்பனைத் திறன் என்பதே எல்லையில்லா புள்ளியினை தடையில்லாமல் தொடுவதுதானே...
நில், நட, சாப்பிடு, பாடு, ஓடு, பேசு, பேசாத என்று அனைத்தையும் கட்டாயத்தின் பேரில், பாடத் திட்டம் என்ற பெயரில் திணிப்பது என்பது ஓர் உயர்ந்தக் கற்பனைக்கு தடையாகத்தானே அமையும்...
யானை இரத்தமும் சதையும் உணர்வும் உள்ள ஓர் அறிவார்ந்த உயிரினம் என்பதனை உணராமல், யானையையே நேரில் காட்டிக் கற்றுத்தராது, யானையின் வரைபடத்தைக் காட்டி இதுதான் யானை என்றால் எப்படி ஐயா கற்பனை வளரும்?
குழந்தைகளின் பாடப் புத்தகத்தில் இருப்பது யானையா அல்லது யானையின் வரைபடமா?
குதிரையா அல்லது குதிரையின் வரைபடமா? என்றால் அவை வெறும் வரைபடங்கள் என்பதே உண்மை.
ஆனால், அந்த உண்மைகளையா கற்றுத் தருகின்றன இந்த பள்ளிகள்?
அந்த படங்களைக் காட்டி, இது யானையின் வரைபடம் என்று கற்றுத்தரமால், இதுதான் யானை என்றது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை. பொய்.
மெய் உலகிற்கும், புத்தகத்தில் உள்ள மெய்நிகர் மாயவுலகிற்கும் ஆயிரம் ஆயிரம் வேறுபாடுகள் உள்ளன. அதனை எல்லாம் ஆராயாமல், உங்கள் வயிற்றில் குழந்தை இருக்கும் போதே, நீங்கள் வகுப்பறையில் உட்கார்ந்து கற்பிக்கத் தொடங்கினாலும், நீங்கள் உருவாக்கப் போகும் உலகம் என்பது கட்டாயம் கற்பனைத் திறனற்ற ஓர் அடிமை உலகமாகத்தான் அமையும். ஏனெனில்...
நீங்கள் கற்றுத் தருகின்ற அனைத்தும், ஒரு குழந்தையின் பரிசுத்தமான அறிவுப் பெட்டகத்தில் குப்பைகளைப் போல தேங்கும் தன்மை கொண்டவைதானே ஓழிய, அவை குழந்தைகளின் மனம், அறிவு, ஆற்றலை வளர்க்கும் திறன் கொண்டவை அல்ல.
குப்பைகள் ஆளும் தேசத்தில் குப்பைக் கல்வி முறையில் குப்பைகளை உற்பத்திச் செய்துவிட்டு, 100% கல்வி அறிவுப் பெற்றவர்கள் நாங்கள் என்று பீற்றிக் கொள்வதில் என்ன சாதனையை நிகழ்த்திவிடப் போகின்றோம்...
அன்பான பெற்றோர்களே...
அறிவார்ந்த ஆசிரியர்களே...
மாண்புமிகு அரசர்களே...
பாவம் குழந்தைகளையேனும் நிம்மதியாக வாழ விடுங்கள்...
அவர்கள் அவர்களாகவே வளரட்டும்... அவர்கள் அவர்களாகவே கற்கட்டும்...
அவர்கள் அவர்களின் போக்கிலே வாழ்ந்து சாதிக்கட்டும்...
ஏனெனில் அவர்கள் சர்க்கஸ் கூடாரத்து விலங்குகள் அல்ல.
குழந்தைகள்..
ஒரு பேரறிவு பெட்டகங்கள்..
-பேராசிரியர் ஆ.அருளினியன்