பிளஸ் 2 பொது தேர்வு, நேற்று துவங்கியது. தேர்வை முறைகேடின்றி நடத்த, அரசு தேர்வு துறையால், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாவட்ட மற்றும் மண்டல அளவில், 23 உயர் அதிகாரிகள் தலைமையில், 44 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் துறை அலுவலர்கள், தேர்வு கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு, குலுக்கல் முறையில், பணியிட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதற்கான, 'பார்கோடு' அடங்கிய, அடையாள அட்டைகளையும், தேர்வு துறை வழங்கியிருந்தது.
ஆனால், நேற்று முன்தினம் இரவில், அனைத்து மாவட்டங்களிலும், கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட, 60 சதவீத ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளால், வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு, 'கவனிப்பு' தான் காரணம் என, புகார் எழுந்துள்ளது.
இந்த திடீர் மாற்றம், தேர்வில் முறைகேடுக்கு இடம் அளிக்குமோ என்ற, சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மாற்றியது தெரியாமல், தேர்வு பணிக்கு வந்த ஆசிரியர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த மாற்றம், தேர்வு நேர்மையாக நடக்குமா என்ற, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வழக்க மாக, பிளஸ் 2 தேர்வு பணிக்கு, முதுநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படும் நிலையில், விதியை மீறி, தொடக்க பள்ளி ஆசிரியர்களை நியமித்தது ஏன் என்ற, கேள்வியும் எழுந்துள்ளது.








