ஜூன், 3ல் பள்ளிகள் திறப்பு, உறுதியாகியுள்ள நிலையில்,
மாணவ, மாணவியருக்கு இலவசமாக வழங்க பாடப்புத்தகங்கள், அந்தந்த பள்ளிகளுக்கு
எடுத்துசெல்லும் பணி துவங்கியது.கடந்தாண்டு, 1, 6, 9, பிளஸ் 1
வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தில் புத்தகம் வழங்கப்பட்டது.
நடப்பாண்டில், 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, புதிய
பாடத்திட்டத்தில் புத்தகம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை
விடுமுறையில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, தமிழ்நாடு பாடநூல் கழகம்
மூலம், புதிய புத்தகங்கள் வருகை தரும். மே இறுதியில் அந்தந்த பள்ளிகளுக்கு
அனுப்பி, ஜூனில்பள்ளி திறந்த முதல் நாளில், புத்தகங்கள் வழங்கப்படும்.
இந்தாண்டுக்கான புதிய பாடப்புத்தகம் கடந்த, மே முதல் வாரம் முதல் வரத்
தொடங்கியுள்ளது. ஈரோடு மற்றும் பெருந்துறை கல்வி மாவட்ட
பாடப்புத்தகம்,ஈரோடு, கொல்லம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு
வந்துள்ளது. கோபி, பவானி, சத்தி கல்வி மாவட்டங்களுக்கு உட்பட்ட
குழந்தைகளுக்கான புத்தகம், கோபியில் வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன், 3ல்
பள்ளி திறக்கவுள்ளது.
இதனால் நேற்று முதல் அந்தந்த பள்ளிகளுக்கு, புத்தகங்கள் அனுப்பும் பணி
தொடங்கியது. பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே வழங்கப்படும். மாவட்ட அளவில்,
1.70 லட்சம் புத்தகங்கள், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. இதேபோல்
தனியார் பள்ளிகளுக்கான பாடப்புத்தகம், தமிழ்நாடு பாடநூல்கழகம் மூலம்,
பல்வேறு தனியார் பள்ளிகளில் மொத்தமாக அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து
அந்தந்த பள்ளிகளுக்கு நேற்று முதல் அனுப்பி வைக்கப்பட்டது.