நாங்கள் பணிபுரிந்து வரும் அரசுப்பள்ளி பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி....
மனமுவந்து எங்களை நாங்களே பாராட்டிக் கொள்கிறோம்
சுற்றியுள்ள
தனியார் பள்ளிகளிலிருந்து
அடித்து விரட்டப்பட்டமாண வர்கள் பத்தாம்வகுப்பில் அரையாண்டுத்தேர்வு வரை சேர்ந்த மாணவர்களில் ஒரு சிலர் தோல்வி.
அரசுப் பள்ளியைத் தவிர வேறுயார் அடைக்கலம் தருவார் இவர்களுக்கு .
அந்த தனியார் பள்ளிகள் நூறு சதம் தேர்ச்சி பெற்றதாக
பத்திரிக்கைகளில்
பக்கம் பக்கமாக விளம்பரம் தந்து அடுத்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை அள்ளிவிட்டார்கள்
சிறந்த பள்ளியென்று பெயர் பெற்றுவிட்டார்கள்
எங்களை யாரும் பாராட்ட மாட்டார்கள்
ஏனென்றால் அடித்துவிரட்டப்பட்ட ,
திறன் குறைந்த மாணவர்களை
நாங்கள தேற்றிவிட்டோம் என்று.
ஆனாலும்
எங்கள் பள்ளியில் பயின்ற
ஏழை மாணவர்களை தேற்றியமைக்காகப் பெருமையடைகிறோம்.
சில புள்ளி விபரங்கள்...
காலை உணவு உண்ணாமல் பள்ளிக்கு வரும் மாணவர்கள் 20%.
மாணவர்கள் மயக்கம் போடாமல் எந்த இறைவணக்கக் கூட்டமும் முடிந்ததில்லை.
(பின் குறிப்பு. ஆசிரியர்களது கவனத்திற்கு எட்டியவரை பசியைப் போக்கியே வருகிறோம்.உடனே பாய வேண்டாம்)
குடிகாரத்தந்தையின் பிள்ளைகள் 60%
தாயையோ தந்தையையோ அல்லது இரண்டு பேரையுமோ இழந்தவர்கள் 25%
குற்றப்பிண்ணணியும் போதைப்பழக்கத்திற்கு ஆட்பட்ட மாணவர்கள் ஏறத்தாழ 10%
பெண் குழந்தைகள் பெரும்பாலும் பாதுகாப்பிற்காகவே பள்ளிக்கு அனுப்பப்படும் சூழல்.
ஏழ்மை.... அது இல்லையெனில் யார் வரப்போகிறார்கள் அரசுப்பள்ளிக்கு?
அப்புறம் சமூகத்தின் போதைக்கு ஊறுகாயாய் யார் வேண்டுமானாலும் அரசுப் பள்ளியைத் தொட்டுக்கொள்ளலாம்.
சதவீதத்தைக் கொண்டாடுபவர்களுக்குத் தெரியாது
சமூகநீதியைக் காப்பது
அரசுப்பள்ளிகள் தானென்று...
சாதி, மதம்,பொருளாதாரம், பாலினம்,கலாச்சாரம் மற்றும் பண்பாடு இவற்றால் புறந்தள்ளப்படும் மாணவர்களுடைய ஒரே அடைக்கலம் அரசுப்பள்ளிகள் என்பதை உணராதவர்கள்தான்
மதிப்பெண்களைக் கொண்டாடடுகிறார்கள்.
நாங்கள் விளிம்புநிலை மாணவர்களைக்கொண்டாடுகிறோம்.
மதிப்பெண்களால் துண்டாடப்படும் மாணவர்களுக்கு அடைக்கலம் தரும் அன்னை மடியாக அரசுப்பள்ளிகள் என்றென்றும் விளங்கும்.
மனமுவந்து நம்மை நாமே வாழ்த்திக்கொள்வோம்
அரசுப்பள்ளியில் பயின்று பொதுத்தேர்வில் தோற்றவர்கள்
தேர்வில்மட்டும்தான்
தோற்றுள்ளார்கள்
ஆனால் நிஜவாழ்க்கையில்
வெற்றிபெற நாங்கள் பயிற்றுவித்திருக்கிறோம்
மதிப்பெண்கள்தான் குறைவாகப் பெற்றுள்ளனர்.
மனித மதிப்புகளை அதிகம் கற்றிருக்கிறார்கள்.
அரசுப்பள்ளி என்பது நல்ல மனிதர்களை உருவாக்கும்
மனித தொழிற்சாலை