தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 59,785மாணவர்கள் தேர்ச்சி
பெற்றுள்ளனர். இது 48.57 சதவிகிதமாகும். இத்தனை மாணவர்கள் வெற்றி
பெற்றிருந்தாலும் 13,000 மாணவர்கள் மட்டுமே நேரடியாக போட்டியிடும் அளவிற்கு
தகுதி வாய்ந்த மதிப்பெண்களைப் பெற்று இருக்கிறார்கள்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 2,583 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால் 39 மாணவர்கள் மட்டுமே தகுதி வரையறை பட்டியலுக்குள் இடம் பெறுகிறார்கள்.
தேர்ச்சி பெற்ற 2,583 அரசு பள்ளி மாணவர்களில் 2 பேர் மட்டுமே 400 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளனர். 37 மாணவர்கள் 300-ல் இருந்து 400 வரை பெற்றுள்ளனர். இவர்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்கு 450 மதிப்பெண்களுக்கு மேல் மதிப்பெண் பெற வேண்டும். ஆனால் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் கிடைக்கும். அதற்கு அதிக பணம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.தமிழ்நாட்டில் 24 அரசு மருத்துவக்கல்லூரிகளும், 23 தனியார் மருத்துவக்கல்லூரிகளும் உள்ளன. இதில் அகில இந்திய அளவில் உள்ள இட ஒதுக்கீடு 15 சதவீதம் போக 85 சதவீதம் இடங்கள் தமிழக மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்தியாவில் 465 அரசு மருத்துவக்கல்லூரிகளும், அதில் 66,771 இடங்களும் உள்ளன. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 1,400 கூடுதல் இடங்கள் இதுவரை தமிழ்நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் 3,350 இடங்களும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 3,350 இடங்களில் 1,843 அரசுக்கும் 1,507 கல்லூரியின் நிர்வாக இடஒதுக்கீடாக வழங்கப்படுகின்றன.14,10,755 மாணவர்கள் அகில இந்திய அளவில் தேர்வு எழுதினார்கள்.
இதற்கு வெவ்வேறு மாநிலங்களில் வேறு பாடத்திட்டம் பயன்படுத்தப்பட்டது. இந்தப் பொதுத் தேர்வு முறையால் வேறு பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் பயிலும் மாணவர்களோடு போட்டியிடுவது கடினம் என கூறப்பட்டது. ஆனால் நீட் தேர்வின் மூலம் கல்லூரிகளுக்கு தனித்தனியாகபணம் செலுத்தி விண்ணப்பப் படிவம் வாங்குவதும் தனித்தனியாக அணுகுவதும் உள்ள முறை மாற்றப்பட்டுள்ளது. இப்பொழுது உள்ள முறையின்படி ஒரு முறை ஆயிரம் ரூபாய் செலுத்தி மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.இதற்கு முன்னர் ஒரு கல்லூரியில் சேர்ந்த பிறகு மற்றொருகல்லூரியில் இடம் கிடைத்தால் செலுத்திய பணம் முழுவதும்கிடைக்காமலும் கொடுக்கப்பட்ட சான்றிதழ்களை திரும்பப்பெறுவதிலும் சிக்கல்கள் இருந்தது. ஆனால் நீட்தரவரிசை அடிப்படையில் ஒவ்வொரு மாணவர்களும் தங்களுக்கு எந்த கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
மேலும் நீட் தேர்வின் வழிமுறையின்படி அனைத்து இடங்களும் அந்தந்த மாநில மாணவர்களுக்கு வழங்கப்படுவதால் இதற்கு முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட முறை மாற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு முன்னால் நிர்வாக இடஒதுக்கீட்டில் ஒரு இடத்திற்கு ரூ.50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை யார் பணம் தருகிறார்களோ அது எந்த மாநிலத்து மாணவர்களாகஇருந்தாலும் அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. இந்த முறை இப்போது ஒழிக்கப்பட்டுவிட்டது. அனைத்து இடங்களும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே நிரப்பப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2016-ல் நீட் தேர்வு இரண்டு மொழிகளில் எழுதப்பட்டது. ஆங்கிலமும், இந்தியும் தேர்வு மொழியாக இருந்தது. அதற்குப் பின்னர் தமிழ் உள்பட பல மொழிகள் இணைக்கப்பட்டன.
74.92 சதவீதம் பெற்று டெல்லி தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. 73.41 சதவீதத்துடன் ஹரியானா இரண்டாவது இடத்திலும், 73.24 சதவீதத்துடன் சண்டிகர் மூன்றாவது இடத்தையும், குறைந்தபட்சமாக 34.2 சதவிகிதத்துடன் நாகலாந்து கடைசி இடத்தையும் பிடிக்கிறது. 701 மதிப்பெண்களுடன் ராஜஸ்தான் மாணவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். இரண்டு மாணவர்கள் 700 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அவர்கள் தரவரிசையின் அடிப்படையில் அடுத்தடுத்து உள்ளனர்.2018-ல் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் அளவில் 12-வது இடத்தைப் பிடித்தார். ஆனால் இந்த வருடம் 685 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தமிழகத்தைச் சேர்ந்த சுருதி என்ற மாணவியால் அகில இந்திய அளவில் 57-வது இடத்தையே பெறமுடிந்தது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவந்தாலும் சி.பி.எஸ்.இ. அளவிற்கு அதனுடைய தரத்தினை உயர்த்தியதாலும் மாணவர்களால் உடனடியாக தயாராக முடியாததால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.நீட் தேர்வு முறையால் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மருத்துவ கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கிறது. அதுதவிர பல வகைகளில் ரசீதில்லா கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.