------------------------------------------------------------------------
இங்கே மகாத்மாக்களுக்கு அங்கீகாரம் உண்டு. அந்த மகாத்மாக்களையும் விமர்சிக்கும் தகுதி ஆத்மாக்களுக்கு மட்டுமே உண்டு. ஆம் மகாத்மா என்ற பட்டத்தை மட்டுமல்ல, அறிஞர், வழக்கறிஞர், பேரறிஞர், டாக்டர், எஞ்சினியர், கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர், இப்படியான சிறப்புக்களை யார் வேண்டுமானாலும் சூடிக் கொள்ளலாம். அதில் அபகீர்த்தி கிடையாது. தன்னை திருடன் என்ற பட்டத்தில் அடக்கி ஆவணப்படுத்தவே பெரியதொரு துணிச்சல் வேண்டும். ஏனென்றால் திருடன் என்று ஒருவன் தன்னை அறிவித்து விட்டானானால் அவன் முந்தைய தலைமுறைகள், பிந்தைய தலைமுறைகள் எல்லாமே திருட்டுப் பரம்பரை பட்டத்தையே சுமக்கும். அந்த அழுக்கு அமிலக்குளியல் நடத்தினாலும் அகலாது.
‘ரொம்ப வித்தியாசமானதாக இருக்கிறதே!’ என்ற எண்ணத்தில் போன வருடம் கோவை புத்தகத் திருவிழாவில் வாங்கின புத்தகம். வாங்கினதும் ஒரு நூறு பக்கங்கள் படித்து விட்டேன்.
அதில் வரும் சில சம்பவங்களிலேயே நிறைய கலங்கிப் போயிருந்தேன். அடுத்ததாக வந்த வேலைப் பளு, வேறு புத்தகங்கள் வாசிப்பு தேவைக்காக இதன் வாசிப்பை கொஞ்ச காலம் புறந்தள்ள வேண்டியதாயிற்று. அந்த நேரத்தில்தான் இந்த ஆண்டு மொழிபெயர்ப்புக்கான (தமிழ் பிரிவு) சாகித்ய அகடாமி விருதினை இந்த நூல் பெற்றது. அதன் பிறகாவது வாசித்து விடவேண்டும் என்றுதான் நினைத்தேன். முடியவில்லை.
அண்மையில் சேலத்தில் ‘பாலம்’ இலக்கிய நிகழ்ச்சி. மணியன் பிள்ளை சிறப்பு விருந்தினர். அங்கே சென்றேன். பொதுவாக இலக்கியக் கூட்டங்களில் இன்றைய சூழ்நிலைமைக்கு 15- 20 பேர் சேர்வதே அதிகம். இந்த கூட்டத்திலோ 200 பேருக்கு மேல். பேச்சிலும், கலந்துரையாடலிலும் கொஞ்சமும் ஒளிவு மறைவின்றியே பேசினார் மணியன் பிள்ளை.
தான் திருடனானதற்கான சூழல். தன்னுடனே இருக்கும் உறவுக்கார குழந்தை ஒன்றின் இடுப்பு தங்க அரைஞாணை கழற்றி வந்தால் ரூ. 5 தருவதாக சொன்ன அத்தை, அதை கழற்றி போய் கொடுத்தபோதோ, ‘நானாடா இதை கழற்றிட்டு வரச் சொன்னேன்? போடா கள்ளா!’ என்று விரட்டியடித்த தொனி. அதில் ஒன்றும் புரியாது அரைஞாணை தன் வீட்டின் ஒரு மூலையில் குழி தோண்டி புதைத்து வைத்த கோலம். தங்க அரைஞாணை தேடிய உறவுக்காரர்களிடம் தான் சிக்கி, அதை தோண்டிக்கொடுத்து ‘திருட்டுப் பட்டம்’ சுமந்த கோலம். உற்றார் உறவினர் தொடர்ந்து ‘திருடன்’ என்ற பார்வையிலேயே பார்த்த கொடுமை. முதல் திருட்டு, அடுத்த திருட்டு என போலீஸாரே சிக்க வைத்த விதம். தன் மூலம் பிடிபட்ட திருட்டுப் பொருளை போலீஸாரே பங்கு போட்டுக் கொண்ட தன்மை. இப்படி எதையும் ஒளிவு மறைவின்றி விண்டு விண்டு வைத்த மணியன் பிள்ளையிடம் ஒளிர்ந்தது சத்தியத்தின் ஒளி மட்டுமல்ல. சமூக அவலத்தின் கீற்று. அவரை அங்கேயே வைத்து பேட்டியெடுத்தேன். அந்த நேரத்தில் எனக்குள் உழன்றதெல்லாம், ‘புத்தகத்தை முழுசாக படிக்காமல் இருந்து விட்டோமே!’ என்ற ஏக்கம்தான். அன்றைக்கு வந்தவுடன் கையில் எடுத்ததுதான். முதலில் படித்த 100 பக்கங்களையும் திரும்ப வாசித்த பின்பே மொத்தம் 590 பக்கங்களையும் கடந்தேன்.
சில இடங்களில் மூச்சு முட்டியது. விம்மல்தான். பல இடங்களில் கண்ணீர் பொங்கியது. கட்டுக்கடங்கா மனவலிதான் நிறைய இடங்களிலோ பொங்கிப் பிரவாகம் எடுக்கும் கோபம். சமூகத்தின் மீதுதான். இப்படியே மேலும், மேலும் நகரும்போதோ ஒட்டுமொத்த மக்களின் மீது, இந்த சமூக அமைப்பின், அதிகார வர்க்கத்தின் மீது, சுரண்டல்வாதிகளின் மீதே பொங்கிய ஆக்ரோஷத்தை வார்த்தைகளால் சொல்லவே முடியாது. நூலைப் படித்து முடித்த பின்போ என் மனதை மிகவும் அழுத்தி வியர்வையும், ரத்தமும் இணைந்த கூழாக ஒவ்வொரு நாடி நரம்பும் நசுக்கி பிழிந்து விட்ட அதி பயங்கர அவஸ்தை. அழுத்தம் என்றால் அதற்குள் மகா அழுத்தம். நாம் இந்த சமூகத்தை துரோகிக்கிறோம். என்னிடம் மிச்சம் இருப்பதெல்லாம் இல்லாதவர்க்கே. என் சேமிப்பு எல்லாம் இன்று பசித்தவருடையதே. அதை ஏன் உணர மறுக்கிறது மனம். எவ்வளவு சுயநலமியாக வாழ்கிறோம். இப்படியான மனப் பிதற்றல்கள்தான்.
இதோ அடுத்த நாளிலேயே மணியன் பிள்ளைக்கு போன் செய்கிறேன். என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.
‘‘ஐயா, இதுவரை நான் எத்தனையோ நூல்களை படித்திருக்கிறேன். இப்படியொரு நூலை நான் படித்ததேயில்லை. நீங்கள் சொல்லியிருப்பதில் ஒரு வரி, ஒரு வார்த்தை கூட பொய்யில்லை. கற்பனையில்லை. நீங்கள் போலீஸாரிடம் அடிபடும் போது எனக்கு வலிக்கிறது. நீங்கள் போலீஸாரிடம் சிதைபடும்போது நான் நசுங்கி சாகிறேன். ஒரு கணவனின் நோய்க்கு மருந்து வாங்க தன் உடலையே விற்க முன் வந்த பெண்ணை உதாசீனப்படுத்தி விரட்டுகிறீர்களே. அவளுக்கு சிறு பண உதவி செய்து விட்டு அவள் உண்மையிலேயே கணவனுக்காக விபச்சாரத் தொழிலில் ஈடுபடுபவளா என்றறிய துப்பறிகிறீர்களே. அது நிஜம் என்றானவுடன் அவளுக்கு மேலும் உதவி செய்யத் துடிக்கிறீர்களே. எங்காவது திருட்டு செய்து இந்த பெண்ணுக்கு பெரிய அளவில் உதவ வேண்டும் என்றெண்ணி எண்ணி எத்தனை மாளிகைகள் ஏறி இறங்குகிறீர்கள். நீங்கள் பெரிய, பெரிய வீடுகளாய் ஏறி, இறங்கி தப்பித்து செல்லும் போது நெஞ்சு பதறுகிறேன். மாட்டிக் கொள்ளக்கூடாதே. இவருக்கு ஒரு வீட்டிலாவது திருட்டு கிடைக்க வேண்டுமே. அந்த பெண்ணுக்கு உதவி சென்று சேர வேண்டுமே என்றெல்லாம் நீங்கள் தவித்த தவிப்பை விட வாசித்த நான் தவித்துப் போகிறேன். அந்த அளவு உங்கள் எழுத்தின் நேர்மையில், இல்லையில்லை, திருட்டின் நேர்மையில் பொது அறத்தின் திமிறில் நான் சிக்கி தவித்ததை வார்த்தைகளால் சொல்ல முடியாது. புதுமைப்பித்தன் பொன்னகரம் ஒரு கற்பனைதான். ஆனால் நீங்களோ உங்கள் சுயசரிதையில் எத்தனை பொன்னகரத்தை நிஜத்தில் காட்டி செல்லுகிறீர்கள்?!’’
வார்த்தைகள் பிதற்றலாகத்தான் விழுகிறது. ஆனால் அது நிஜமானவை, சத்தியமானவை. யாரங்கே? இங்கே யாரெல்லாம் தன்னை யோக்கியன் என கருதிக் கொள்கிறீர்களோ, அதையே அனைவரிடமும் பிரஸ்தாபிக்கிறீர்களோ, அவர்கள் எல்லாம் கொஞ்சம் முன்னால் வாருங்கள். நீங்கள் இந்த இந்த நூலை கட்டாயம் படியுங்கள். அப்புறம் சொல்லுங்கள் நீங்கள் உத்தமரா, சத்தியசீலரா? யோக்கியரா? என்று. படித்து முடிக்கும்போது ஏதாவது ஒரு மூலையில் திருடனுக்கு திருடனாய் நிர்வாணப்படுத்தப்பட்டு குற்ற உணர்ச்சியோடே நீங்கள் அலைய நேரிடும்.
இங்கே ஒரு திருடனாகப்பட்டவன் கூட எவ்வளவு அறத்தோடு செயல்படுகிறான். ஆனால் அறத்துடனே செயல்பட வேண்டிய காவல்துறை, நீதித்துறை, அரசியல் துறை, பத்திரிகை துறை, ஊடகத்துறை, மருத்துவத்துறை, பொறியியல் துறை என வரும் மானுடக் கருவிகள் அந்த திருடனின் குறைந்தபட்ச அறத்துடனாவது செயல்படுகிறதா? என்ற கேள்வியை நீங்கள் கேட்காமல் இருக்கவே முடியாது. மேற்படி சகல துறை சார்ந்தவர்களையும் விமர்சனம் எனும் ஆயுதத்தால் நசுக்கி சாறு பிழியும் ஆற்றல் உண்டென்றால் அது ஒரு திருடனுக்கு மட்டுமேயானதாகும் என்பதையும் வரிக்கு வரி மெய்ப்பித்து விடுகிறது இந்நூல்.
ஓரிரு லட்சம் ரூபாய் திருடி அதையே முதலீடு ஆக்கி தன் பெண்டாட்டி பிள்ளைகளுடன் மாநிலம் விட்டு மாநிலம் போய் திருந்தி வாழ ஆசைப்பட்டு பாயாசக்கடை, ஓட்டல்கடை, பருத்தி வியாபாரம் புகையிலை வியாபாரம் என புறப்பட்டு கோடீஸ்வரனாகி எம்.எல்.ஏ ஆகும் தகுதிக்கும் வருகிறார் மணியன் பிள்ளை. அவரின் மக்கள் செல்வாக்கை பார்த்து ஹெக்டே சீட் கொடுக்கிறார். ஆளும் கட்சியான முதல்வர் குண்டுராவோ, ‘என்னிடம் வா நான் பார்த்துக் கொள்கிறேன்!’ என்கிறார். ‘அவர்களிடம் வேட்பு மனுவில் கையெழுத்து போட்டு விட்டு, உங்களிடம் தாவி வருவது அறமல்ல!’ என மாநில முதல்வரிடமே சொல்லிவிட்டு திரும்பி வரும்போது இன்னமும் கூடுதலாக மிளிர்கிறார் மணியன்.
இந்த நாடகத்தின் உச்சத்தில் கேரள போலீஸாரால் பழைய வழக்குகளை முன்வைத்து கைது செய்யப்படும் மணியன் பிள்ளை 15 நாள் போலீஸ் காவலில் வைக்கப்படுகிறார். அவர் சம்பாதித்த கோடிக்கணக்கான சொத்துக்களை பறிமுதல் செய்கிறார்கள். அதை போலீஸார், இன்னபிற அதிகாரிகள் பங்கு போட்டது போக மீதி 88 லட்சம் ரூபாய் அரசு ஏலத்திற்கு போகிறது. நினைத்துப் பாருங்கள் 1983 ஆம் ஆண்டில் ரூ. 88 லட்சம் என்றால் இன்றைக்கு எத்தனை ஆயிரம் கோடி என்று. ‘அந்த சொத்தில் முதலீடாக போடப்பட்ட ஓரிரு லட்சம்தான் திருட்டு சொத்து. மற்றவை எல்லாம் நான் உழைத்து சம்பாதித்தது!’ என்று சுப்ரீம் கோர்ட் வரை சென்று மன்றாடுகிறார் மணியன் பிள்ளை. திருடனாக இருந்து திருந்தி வாழும் மணியன் பிள்ளைக்கு முப்பது ஆண்டுகாலம் கழிந்து பின்பு கிடைத்த பரிசு, ‘கள்ளன் சொத்தை திருப்பிக் கொடுக்க சட்டத்தில் இடமில்லை!’ என்பதே. பைத்தியம் பிடித்து ரோடு ரோடாக திரிகிறார். நிர்கதியான தந்தையை காப்பாற்றி தன்னுடன் வைத்து தான் செய்யும் டெய்லர் கடை தொழிலின் மூலம் சோறுபோட்டு காப்பாற்றுகிறார் அவர் மகன்.
இச்சமூகத்தை அப்பட்டமாக ஒற்றை மனிதனாக, திருடனாக நின்று தோலுரிக்கிறார் மணியன் பிள்ளை.
‘நாளைய சேமிப்பு இன்று பசியோடிப்பவனுடையது!’ என்பது எனக்கு பிடித்த பொன்வரி.
அதையே திருட்டே செய்யாமல், திருட்டுக் குற்றத்தில் மாட்டி, பணத்திற்காக அறியாப் பழி சுமக்கும் இளைஞர்கள் சிலரை முன்னிறுத்தி திருடன் மணியன் பிள்ளை எப்படி பேசுகிறார் பாருங்கள்:
‘... பணத்தின் மிகப்பெரிய அசிங்கம் இதுதான். இங்கே விரயமாகும் பணம் உழைத்தோ வியர்வை சிந்தியோ சம்பாதித்தது அல்ல. என்னைப் போல் திருடிய பணம்தான். நான் நேரடியாகப் போய் திருடுகிறேன். இவர்கள் தொழிலாளர்களை பிழிந்தும், அரசாங்கத்தை ஏமாற்றியும், கூட்டிக் கொடுத்தும்... நான் ஒரு இரவில் ஒரு வீட்டுக்காரனின் சாபத்தை ஏற்கிறேன் என்றால், இவர்கள் பல தலைமுறையினரின் சாபத்தை ஏற்கிறார்கள். இவர்களின் முன்னால், இவர்கள் வீசும் பணத்திற்கு முன்னால் பாவம் இந்த இளைஞர்கள் கூனிக்குறுகி நிற்கிறார்கள்...!’
உலகத்திலேயே சிறந்த நூல் எது என்றால் இதுவரை வாசிக்கப்படாத நூல். எழுதப்படாத நூல் என்று அடிக்கடி சொல்லுவேன். அதில் உண்மை இருக்கவே செய்கிறது என்பதை இப்போதும் மெய்ப்பிக்கிறது இந்நூல்.
ஏழெட்டு மாதம் முன்பு, ‘சத்தியசோதனை, கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு, குடும்பம்-தனிச்சொத்து-அரசு, வால்காவிலிருந்து கங்கை வரை, நள்ளிரவில் சுதந்திரம்!’ என என்னை செதுக்கிய ஐந்து நூல்களை பட்டியலிட்டிருந்தேன். இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள சத்திய சோதனையையும் தாண்டி அதனிடத்தை என் மனதளவில் பிடித்து விடுகிறது இந்த திருடன் மணியன் பிள்ளை நூல்.
‘சத்திய சோதனை’ மகாத்மாவாக பேசுகிறது. ‘திருடன் மணியன் பிள்ளை’யோ சாமான்ய ஆத்மாவாகவே பேசுகிறது. மகாத்மாவிற்கு அடையாளங்கள் உண்டு. அரசியல் உண்டு. வி.வி.ஐ.பி அந்தஸ்தும் உண்டு. அவருக்கு தன்னை யோக்கியப்படுத்திக் கொள்ள நிறைய அம்சங்கள் உண்டு இந்த திருடன் மணியன் பிள்ளைக்கு அயோக்கியப்படுத்திக் கொள்ள மட்டுமே திருடன் என்ற அயோக்கியம் உண்டு. தன் அயோக்கியத்தனத்தை தோலுரித்துக் கொண்டு இந்த சமூகத்தின் அயோக்கியத்தனத்தை தோலுரிக்கும் அவரின் செயல் இருக்கிறதே. அதுதான் சொல்லில் வடிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. மறுக்க முடியாத பரிசுத்த ஆன்மாவாகவும் திகழ்கிறது.
அப்படியானதொரு அமிலக்குளியல் நடத்தும் மணியன் பிள்ளை திருடனாக தன்னை முழு நிர்வாணப்படுத்திக் கொண்டு ஒட்டு மொத்த சமூகத்தையும் நிர்வாணப்படுத்தும் செயல் இருக்கிறதே, அது இதுவரை யாரும் செய்யாதது. அதை மணியன் பிள்ளை செவ்வனே செய்திருக்கிறார். அதை செய்வதற்காகவே போலீஸின், சிறையின் சித்ரவதைக் கூடங்களில் எல்லாம் சக்கை போல் நசுங்கிப் பிழியப்பட்டும் ஜீவனை கையில் பிடித்துக் கொண்டு உயிரோடு இருந்திருப்பார் போலிருக்கிறது. அதற்காகவேனும் இந்த புத்தகத்தை அவசியம் வாசியுங்கள்.
- கா.சு.வேலாயுதன், கோவை, 16.06.2019
🤔 நூல் விவரம்: திருடன் மணியன் பிள்ளை, எழுதியவர் ஜி.ஆர். இந்துகோபன், தமிழில் குளச்சல் மு.யூசுப், காலச்சுவடு வெளியீடு, பக்கங்கள் 590, விலை ரூ. 590/-







