ஃப்ரான்ஸ் காஃப்கா நம்முடைய கதாசிரியர்கள், விமர்சகர்கள், அறிவுஜீவிகள்(?) ஆகியோரால் கொண்டாடப்படும் எழுத்தாளர். இவர் 1883 ல் செக் குடியரசின் தலைநகரான ப்ராக்கில் பிறந்த யூதர். அங்கு சட்டப்படிப்பை முடித்துவிட்டு இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே மாலைப் பொழுதுகளில் எழுதிக்கொண்டிருந்தார். எழுத்தில் முழுக்கவனம் செலுத்தும் நோக்கோடு 1923ல் ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்கு சென்றார். 1924ல் காச நோய்க்குப் பலி ஆனார். அவரின் இந்த நாவல் 1914-15களில் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டு முடிக்கப்படாமலேயே அவர் இறந்துவிட்டார். ஒன்றிரண்டு அத்தியாயங்கள் முடிக்கப்படாவிட்டாலும் நாவலின் இறுதி அத்தியாயத்தை எழுதி முடித்துவிட்டார். அவரின் மறைவுக்குப் பிறகு அவரது நண்பரும் இலக்கியவாதியுமான மேக்ஸ் ப்ராட் (Max Brod) என்பவரால் இது பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தது. இதை ஆங்கிலத்தில் எட்வின் முயர் (Edwin Muir) மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலப் பதிப்பு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.
இந்த நாவலின் சிறப்பு ஹிட்லரின் காலத்துக்கு முன்பு எழுதிய நாவல், ஹிட்லர் அரசு தனி மனிதர்கள் மேல் செலுத்திய பயங்கரவாதத்தைப் பிரதிபலிப்பதுதான். இதன் நாயகன் ஜோசப், வங்கியில் இரண்டாம் நிலை அதிகாரியாய் இருப்பவன், ஒரு நாள் காலை கைது செய்யப்படுகிறான். என்ன குற்றம் என்று அவனுக்கும் தெரியவில்லை; நமக்கும் சொல்லப்படவில்லை. அவன் வக்கீல், கோர்ட் என அலை கழிக்கப்படுகிறான்; ஒரு குற்றமும் செய்யாத ஒருவன் கைது செய்யப்படுகிறான், அவன் மீது எந்த குற்றமும் பதிவு செய்யப்படவில்லை. எனினும் வானளாவிய அதிகாரம் கொண்ட அரசு எந்திரம் மற்றும் நீதிமன்றத்தால் தொடர்ச்சியாக மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு இறுதியில் ஒரு நாயைப்போல் கொல்லப்படுகிறான். காஃப்கா 25 வருடங்களுக்கு முன்பே எண்ணற்ற அப்பாவி யூதர்கள் ஹிட்லரின் நாஜி அரசால் இனப் பாகுபாடு பாராட்டி குரூரமான முறையில் துன்புறுத்தப்பட்டு அழித்தொழிக்கப்பட்டதை சிம்பாலிக்காகவும் தொலை நோக்குப் பார்வையுடனும் இந்த நாவலில் வெளிப்படுத்துவதாலேயே இது உலக அளவில் கவனம் பெற்றது.
நாவலின் பாத்திரங்கள், சம்பவங்கள், நீதிமன்றம், வங்கி, வக்கீல் அலுவலகம் எல்லாமே வினோதமாகவும், யதார்த்த மீறல்களுடனும் இருக்கின்றன; கதாபாத்திரங்களின் உரையாடல்கள் நீண்டவையாக, சில சமயங்களில் விசித்திரமாகவும் இருக்கின்றன. மிகவும் பொறுமையாகவும், கவனத்துடன் வாசிக்க வேண்டிய நாவல்.
தோழமையுடன்







