♦♦மத்திய அரசின் நேரடி ஆளுகையின் கீழ் வரக்கூடிய நிர்வாகப் பகுதியே யூனியன் பிரதேசம் என அழைக்கப்படுகிறது.
♦♦இந்த யூனியன் பிரதேசங்களில் இரண்டு வகை உள்ளது. பகுதி மாநில அந்தஸ்துடன், துணைநிலை ஆளுநர் நியமிக்கப்பட்டு, சட்டப்பேரவையையும் கொண்டவை ஒருவகை.
♦♦இந்த யூனியன் பிரதேசங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இருப்பார். துணைநிலை ஆளுநர், குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக, அமைச்சரவை பரிந்துரையின்படி செயல்படுவார்.
♦♦இருப்பினும், எல்லா விவகாரங்களிலும் அவர் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறவேண்டியதில்லை. டெல்லியை எடுத்துக்கொண்டால், அங்கு மாநில அரசுக்கு நிலம், சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல்துறை அதிகாரங்கள் கிடையாது. இந்த விவகாரங்களில் துணைநிலை ஆளுநரே முழுமையாக முடிவெடுப்பார்.
♦♦சட்டப்பேரவையோ முதலமைச்சரோ இன்றி, நேரடியாக மத்திய அரசால் ஆளப்படுபவை இரண்டாவது வகை யூனியன் பிரதேசங்களாகும். ஆலோசகர் குழுவின் உதவியுடன், துணை நிலை ஆளுநரே நேரடியாக நிர்வாகங்களை கவனிப்பார்.
♦♦தற்போது இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில், டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் மட்டும் சட்டப்பேரவையுடன் கூடியவை.
♦♦இந்த வரிசையில் மூன்றாவதாக ஜம்மு-காஷ்மீர் சேர உள்ளது. இதுதவிர, சண்டிகர், தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லட்சத்தீவு, அந்தமான் மற்றும் நிக்கோபர் ஆகிய 5 யூனியன் பிரதேசங்களும் நேரடியாக மத்திய அரசின் ஆளுகையில் உள்ளன. ஜம்மு-காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட உள்ள லடாக், இந்த வரிசையில் 6ஆவதாக சேர உள்ளது. 370ஆவது பிரிவை ரத்து செய்யும் மத்திய அரசின் அறிவிப்பால், யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்கிறது.








