இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர, பாடவாரியாக ஒரே நுழைவுத் தேர்வை கொண்டு வருவது குறித்து புதிய தேசிய கல்விக் கொள்கையின் இறுதி வரைவில் பரிந்துரைக்கப்படும். மாணவர்களின் சிரமத்தை போக்க, இத்தேர்வு ஆண்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நடத்தப்படும். இத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தும். தற்போது, பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் சேர மாணவர்கள் தனித்தனியாக நுழைவுத் தேர்வு எழுதி வருகின்றனர். ஒரே நுழைவுத்தேர்வு கொண்டு வருவதின் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் நெருக்கடி குறையும்.புதிய தேசிய கல்விக் கொள்கையின் இறுதி வரைவு குறித்து 2 லட்சம் பரிந்துரைகள் ஆய்வு செய்யும் பணி முடிந்துள்ளது. இதனால், இறுதி வரைவு விரைவில் தயாராகி விடும். இதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. உயர்கல்விக்கான பரிந்துரைகளை ஆய்வு செய்ய பெங்களூருவில் ஓர் அலுவலகம் அமைக்கப்பட்டது. பள்ளி கல்விக்காக, சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வாலின் கீழ் ஒரு குழு அறிக்கையை இறுதி செய்தது.
புதிய தேசிய கல்விக் கொள்கை, முற்போக்கான, முற்றிலும் இந்தியாவை மையமாக கொண்ட கொள்கையாக இருக்கும் என நம்புகிறேன். இறுதி வரைவுக்கு பிரதமர் மோடியின் ஒப்புதல் கிடைத்ததும், அதை விரைவில் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது, பொறியியல், வேளாண், மருத்துவம், மேலாண்மை உள்ளிட்ட சில பட்டப்படிப்புகளுக்கு மட்டுமே நுழைவுத்தேர்வு இருந்து வருகிறது. கலை, அறிவியல் பட்டப் படிப்பில் சேர நுழைவுத்தேர்வு கிடையாது. ஆனால் புதிய கல்விக் கொள்கையில், கலை, அறிவியல் பட்டப்படிப்புக்கும் ஒரே நுழைவுத்தேர்வு கொண்டு வரப்படும் என்பது கிராமப்புற மாணவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
* புதிய தேசிய கல்விக் கொள்கையில் பட்டப் படிப்புகளுக்கு பாடவாரியாக தேசிய அளவில் ஒரே நுழைவுத்தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட உள்ளது. இத்தேர்வு ஆண்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நடத்தப்படும்.
* தற்போது, பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கு என மாணவர்கள் தனித்தனியாக நுழைவுத்தேர்வு எழுத வேண்டி உள்ளது.








