கார்த்திகை தீபம் என்றவுடன் நம் அனைவரின் கண்முன்னே வலம்வரும் காட்சி, திருவண்ணாமலை தீபம் என்றால் அது மிகையில்லை.
கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்படுகிறது. மிகப்பெரிய கொப்பரையில் 24 முழ துணியை திரியாக வைத்து கற்பூர தூள் சேர்த்து சுருட்டப்படும். கொப்பரையில் 3500 கிலோ நெய் வார்த்து இந்த சுடர் எரிக்கப்படுகின்றது.
இந்த பெருஞ்சுடர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு எரியும். 60 கி.மீட்டர் தூரம் வரை இந்த சுடர் ஒளி தெளிவாகத் தெரிகின்றது. தீபம் குளிர்ந்த பின்னர், மலையுச்சியில் இருந்து திருக்கோயிலுக்கு தீப கொப்பரை எடுத்துவரப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்படும். பின்னர் அதனை அப்படியே பாதுகாத்து, மார்கழி - ஆருத்ரா தரிசன திருநாளில் கொப்பரையில் இருந்து தீப மை சேகரித்து அதனுடன் இதர வாசனைத் திரவியங்கள் சேர்த்து நடராஜருக்கு சாத்தி வழிபாடுகள் நடைபெறும்.கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்படுகிறது. மிகப்பெரிய கொப்பரையில் 24 முழ துணியை திரியாக வைத்து கற்பூர தூள் சேர்த்து சுருட்டப்படும். கொப்பரையில் 3500 கிலோ நெய் வார்த்து இந்த சுடர் எரிக்கப்படுகின்றது.
சிவனுக்குரிய பஞ்சபூததலங்களில் அக்னி தலமாகத் திகழ்வது திருவண்ணாமலை. இறைவன் அக்னி வடிவமாகத் திகழ்வதால் இங்கு திருக்கார்த்திகை நாளில் தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர். இந்த தீபத்தை தரிசிப்போர் பெறும் நற்பேறுகளை கார்த்திகைத் தீபவெண்பா கூறுகிறது. நல்ல புத்திர சம்பத்து முதல் சித்தி தரும் தீபம் சிவதீபம் சக்திக்கு உயிராகும் சோணமலை ஓங்கிவளர் ஞானப் பயிராகும் கார்த்திகை தீபம். திருவண்ணாமலை தீபத்தை தரிசிப்போர் நல்ல புத்தி, புத்திர பாக்கியம், காரிய சித்தி, ஞானம் ஆகிய நலன்களைப் பெற்று வாழ்வர்.
திருவண்ணாமலை தீபத்தைப் பார்ப்பவர்களுக்கு 21 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறது அருணாசல புராணம். இந்த புராணத்தின் 159 வது பாடலின்படி திருக்கார்த்திகை தீபம் தரிசிப்பவர்களுக்கு உணவுத்தட்டுப்பாடு வராது. பார்த்தவர்களுக்கு மட்டுமன்றி அதைப்பற்றி சிந்தித்தவர்களுக்கும் கூட இடையூறு நீங்கி விடும். இவர்களது 21 தலைமுறை பிறவா வரம் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் போது கார்த்திகை தீபத்தைக் காணாமல் இருக்கலாமா?
இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!!







