
படிப்பு, வேலை, காதலி, மனைவி, கனவு வீடு, என்று பலதும் உங்கள் பலபேருக்கு நினைத்தபடி கிட்டாமல் முதலில் ஏமாற்றம் வந்து பிறகு அதை முறியடித்து வெற்றி கண்டு கிடைத்தபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லையா?
வனாந்தரத்தில் ஒற்றையடிப் பாதையை உருவாக்கத் தெரிந்த உங்களுக்கு ஊர் போய்ச் சேரவும் தெரியும்.
வழிப் போக்கர்களுக்கு வழி காட்டவும் தெரியும்.
ஆனால் அந்த ஒற்றையடிப் பாதையில் பொறுமையின்றி அக்கணமே அவசரமாக கார் ஓட்ட ஆசைப்பட்டால் விபரீதம் தான்.
உங்கள் ஒவ்வொருவரின் நியாயமான எதிர்பார்ப்பும் செயல்வடிவம் பெற நிறைய அவகாசம் தேவை.
நின்று கொண்டிருப்பவர் தரையில் படுக்க வேண்டும் என்றால் அப்படியே விழவா முடியும்?
முதலில் உட்கார்ந்து பிறகு தான் கால் நீட்டிப் படுக்க வேண்டும்.
அது போல் நிதானமற்ற செயலால் அடி விழும் என்பதை உணர வேண்டும்.
வாழ்க்கையைக் கடந்து வரும் போது பல கட்டங்களில் புதிய அனுபவங்களையும் படிப்பினைகளையும் பெற்று வருவது கண் கூடு.
சிறுவயதில் நினைத்து வைத்த இலக்கானது வயது செல்லச்செல்ல சுவாரசியமின்றிப் போவதுமுண்டு.
எப்போதோ மனதில் நினைத்து வைத்த இலக்கானது நடைமுறை வாழ்க்கையில் மாறும் தன்மையுண்டு.
இடையில் புதிய கல்வியோ அனுபவமோ வேலை வாய்ப்போ ஏற்பட்டு இலட்சியம் மாறியிருக்கும்.
எல்லாம் நல்லதுக்கே!
காலப்போக்கில் உங்கள் தோற்றம் பேச்சு உலகறிவு திறமை ஆளுமை எல்லாமே விவேகமாக ஏற்றம் பெற்றிருக்கும்.
ஒற்றையடிப் பாதையில் தொடங்கிய உங்கள் பயணம் இப்போது அகலமான நெடுஞ்சாலையில் பயணிப்பதைக் காண்பீர்கள்.
உங்கள் வயதுக்கும் திறமைக்கும் வாழ்க்கைத் தரத்திற்கும் நிலவும் குடும்பப் பொருளாதார சூழலுக்கும் பொருந்தகூடிய எதிர்பார்ப்புகளை வைத்து கொள்ளுங்கள்.
அதிவேகமாக வளர்ந்ததாக எண்ணி கனவுலகில் சஞ்சரிப்பது தவறில்லை.
ஆனால் அக்கணமே மெய்யாக வேண்டும் என்று எப்திர்பார்ப்பது தான் தவறு.
கவலைப்படுவது என்பது பத்து பைசாவுக்குப் பயன்படாத ஒரு பழக்கம்.
அது எதையும் மாற்றிவிடப் போவதில்லை.
அது எவ்விதத்திலும் ஆக்கபூர்வ சிந்தனையையோ புத்துணற்சியையோ தராமல் நேரத்தை வீணடிக்கும்.
சார், அதெப்படி சிறு கவலை கூட இல்லாமல் மனிதனால் இருக்க முடியுமா? என்று நீங்கள் மனதில் நினைக்கிறீர்கள்.
கவலைகள் வரும் போகும், ஆனால் அதிலேயே வாசம் செய்வது தான் பிரச்சனைகளைத் தரும்.
கவலை என்பது நமக்கு மாற்று உபாயத்தைப் பற்றிச் சிந்திக்க வைப்பதாகவும், அதற்குத் தீர்வுக்காண முயல வைப்பதுமாக இருக்க வேண்டும்.
நம்மைக் கவிழ்த்து விடுவதாக இருக்கக் கூடாது.
எதிர்பார்ப்பும் முன்னேற்றமும் ஒன்றையொன்று சார்ந்துள்ளது என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
ஆகவே இருக்கும் சூழ்நிலையில் எவை எவற்றை ஆசைப்பட்டபடி எட்டிப்பிடிக்க முடியும் என்பதை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
இப்போதைய அம்சங்களைக் கருத்தில் கொண்டு எந்த இலக்கு எத்தனை ஆண்டுகளில் எட்டிபிடிக்க இயலும் என்பதை கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.
அவ்வபோது உங்களுடைய வளர்ச்சியை சுயமதிப்பீடு செய்யுங்கள்.
உங்களை யாருடனும் ஒப்பிட்டுக்கொண்டு கவலைப்பட வேண்டாம்.
உங்கள் சாதனையை நீங்களே முறியடிக்க வேண்டும்.
மற்றவர்கள் வேகமாக அடித்து பிடித்துகொண்டு முன்னேறத் துடித்தால் அவர்கள் எப்படியோ போகட்டும்.
நீங்கள் நின்று கவனித்து நிதானமாக முன்னேறிச் செல்லவும்.
செல்வராஜ் சந்திரசேகர்.