அந்தக் குழந்தை இருந்தது.எழுந்து நிற்பதும் அமர்வதும்
நங் நங்கென்று குதிப்பதும்
சத்தமாக கத்துவதுமாக இருந்தது.
என்னை ஏமாற்றிய மகிழ்வில்
கைகொட்டி பூவாய் சிரித்தது.
பேருந்து நகரம் கடந்து வேகமெடுக்கக் காட்சிகள் மிக வேகமாக
பின்னோக்கிச் சென்றன.
ஏம்ப்பா மரமெல்லாம்
பின்னாடியே போகுது என்ற குழந்தையின் கேள்விக்கு பதில் தெரியாத அப்பா
"தொணதொணக்காம வாரியா"
என்று சிடுசிடுத்த போது சூடு பட்ட பிளாஸ்டிக் பை போல
அதன் முகம் சுருங்கிப் போனது.
ஒரு நிறுத்தத்தில் பேருந்து நிற்க
ஜன்னலுக்கு வெளியே
வெள்ளரிக்கா வேர்க்கடலை
நெய்முருக்கு கடலை மிட்டாய் என
கூடை வியாபாரிகளின்
கூப்பாடு காதைப் பிளந்தது.
இது தான் என்ற இலக்கின்றி
கண்ணில் பட்ட அத்தனைக் கூடையையும் காட்டிக் காட்டி வாங்கித் தரச் சொல்லி அடம் பிடிக்கிறது குழந்தை.
அதெல்லாம் தின்னக் கூடாது என
அம்மாக்காரி அதட்ட
ஊசி பட்ட பலூனாய்
உடைந்து போனது குழந்தை.
நான் ஒரு கடலை மிட்டாய் பாக்கெட் வாங்கிப் பிரித்து
இரண்டு வில்லைகளைப் பிட்டு
அதன் பிஞ்சுக் கரத்தில் திணித்தேன்.
வாய் வரை சென்றதைப் பிடுங்கி ஜன்னல் வழியே வீசுகிறாள் தாய்.
கண்டவங்க கிட்டேயும்
கை நீட்டக் கூடாதுனு எத்தனை தடவ
சொல்லீருக்கேன் என்றபடியே
தொடையில் கிள்ளி விட்டாள் போல,
வீறிட்டு அழுதது குழந்தை.
அழுதா அடிப்பேன் என முறைக்க அழுகை சத்தம் அடங்கி
கேவிக் கொண்டே இருந்தது நீண்ட நேரமாய்.
தகப்பன் என்னை திரும்பிப் பார்த்து
லேசாக முறைத்தான்,
திருப்தியா என்பது போல.தலை கவிழ்ந்து கொண்டேன்.
பேருந்து செல்லச் செல்ல குழந்தையின் கேவல் குறைந்து
மீண்டும் வேடிக்கை பார்க்கத் தொடங்கி இருந்தது இயல்பாக.
எனக்கான நிறுத்தம் வர எழுந்தேன்.அந்தக் குழந்தை என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்தது.கை ஆட்டி டாட்டா சொன்னது.
நான் கவனிக்காதது போல் முகம் திருப்பிக் கொண்டேன்.
மீண்டும் அதன் அழுகைக்கு காரணமாகி விடக் கூடாதென.
அந்தப் பிஞ்சு என்னைப் பற்றி என்ன நினைத்திருக்கும்....?
இருந்த ஒரே ஆறுதலும்
ஏன் முகம் திருப்பிக் கொண்டதென
குழம்பித் தவித்திருக்குமோ....!?
உலர்ந்த சருகு போல
பேருந்தினின்றும் உதிர்ந்து நின்று கொண்டிருந்தேன்.
ஏதோ ஒன்று குறைந்த மாதிரி வெறுமையை உணர்ந்தேன்.
ஆஹா......
என் மனதைக் காணவில்லை !
எங்கே போயிருக்குமென
ஏறெடுத்துப் பார்க்கிறேன்.
அந்த மழலையோடு
என் மனதையும் சுமந்தபடி
தூரத்தில் அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது !!








