அண்ணல் அம்பேத்கர் தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான கடிதம் - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


அண்ணல் அம்பேத்கர் தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான கடிதம்

அண்ணல் அம்பேத்கர் தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான  கடிதம்

https://www.facebook.com/groups/572667849885236/permalink/804088476743171/

ரமா, நீ எப்படியிருக்கிறாய் ரமா.

இன்று முழுக்க உன்னையும், யஷ்வந்தையும் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். உன்னைப்பற்றி எண்ணுகையில் உருக்குலைந்து போகிறேன். சமீப காலங்களில் என்னுடைய உரைகள் பெரும் விவாதங்களை எழுப்பியிருக்கின்றன. வட்ட மேசை மாநாட்டில் நான் நிகழ்த்திய உரைகள் நன்றாகவும், ஊக்கமூட்டுவதாகவும் இருந்ததாகச் செய்தித்தாள்கள் குறிப்பிட்டுள்ளன. அதற்கு முன்னால், இந்த மாநாட்டில் என்னுடைய பங்கு என்ன எனப் பிரதிபலித்துக் கொண்டிருந்தேன். நம் நாட்டின் ஒடுக்கப்பட்ட குடிமக்களின் முகங்கள் கண்முன் நின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இவர்கள் வலியிலும், துயரத்திலும் உழன்று அல்லல்படுகிறார்கள். தங்களுடைய துயரங்களுக்கு முடிவோ, விடிவோ இல்லையென்று நம்புகிறார்கள். நான் அதிர்ந்து போனேன் என்றாலும், இந்தத் தீமைக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருக்கிறேன். பெரும் அறிவுறுதியை பெற்றவனாக உணர்கிறேன். என்னுடைய மனதில் பல சிந்தனைகள் நிழலாடுகின்றன. இதயம் பல வகையான உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளது.

நான் நம் வீட்டையும், உங்கள் எல்லாரையும் காணத்துடிக்கிறேன். உன்னை எண்ணி பிரிவுழல்கிறேன். யஷ்வந்தின் நினைவு வாட்டியெடுக்கிறது. என்னை வழியனுப்ப கப்பல் வரை வந்தாய். உன்னை வரவேண்டாம் என நான் சொல்லியும், எனக்குப் பிரியாவிடை கொடுக்க ஓடோடி வந்தாய். சுற்றியிருந்த மக்கள் என்னை ஆரவாரத்தோடு வழியனுப்பி வைப்பதை கண்கூடாகப் பார்த்தாய். நீ நன்றியுணர்வால் நிறைக்கப்பட்டவளாக, உணர்ச்சிவயப்பட்டவளாகக் காட்சியளித்தாய். உன்னுடைய உணர்வுகளைச் சொற்களைக்கொண்டு வெளிப்படுத்த இயலாமல் நின்றாய். நீ பேச நினைத்ததை எல்லாம் உன் விழிகள் தெரியப்படுத்திவிட்டன. நீ உதிர்க்கும் சொற்களைவிட உன்னுடைய மௌனம் பலவற்றைப் பேசியது. உன் நாவினில் சொற்கள் பூத்தன,எனினும், உன் விழித்துளிகளே அச்சொற்களின் முழுப்பொருளாகும். அந்தக் கண்ணீர்த்துளிகள் வாய்மொழி வெளிப்படுத்த இயலாதவற்றையெல்லாம் பேசின.

லண்டனின் காலை வேளையில் இந்த எண்ணங்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறது, அழுதுத்தீர்த்து விட வேண்டும் என்றிருக்கிறது. நான் கிடந்து தவிக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய் ரமா? நம் யஷ்வந்த் நலமா? அவன் அப்பா எங்கே என்று கேட்கிறானா? அவனுடைய மூட்டுவலி மட்டுப்பட்டிருக்கிறதா? நம்முடைய நான்கு குழந்தைகளை இழந்து நிற்கிறோம். யஷ்வந்த் மட்டுமே நமக்காக உயிர்த்திருக்கிறான். அவனே உன் தாய்மையின் முகம். அவனை நாம் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவன் மீது எப்போதும் ஒரு கண் வைத்துக்கொள் ரமா. யஷ்வந்திற்கு நிறையக் கற்பி. இரவு அவனை எழுப்பிப் படிக்க வை. என் தந்தை என்னை இரவில் எழுப்பிப் படிக்க வைப்பார். என்னைத் தவறாமல் எழுப்ப வேண்டுமென்பதற்காக அவர் தூக்கந்தொலைந்து விழித்திருப்பார். அவர்தான் எனக்கு இந்த ஒழுக்கத்தைப் பயிற்றுவித்தார். நான் படிக்க எழுந்ததும் அவர் உறங்கப்போய் விடுவார். இரவு போயும் போயும் எழ வேண்டுமா என எனக்கு ஆரம்பத்தில் சோம்பேறித்தனமாக இருக்கும். படிப்பதைவிடத் தூங்குவதே சுகமானது இல்லையா. ஆனால், இப்போது திரும்பிப்பார்க்கையில், உறக்கத்தை விடவும் கல்வியே வாழ்க்கைக்கு முக்கியமானதாக மாறியிருக்கிறது. இதற்கான பெரும்பாலான பாராட்டுகள் என் தந்தையைச் சேர வேண்டும். நான் படிப்பில் ஆர்வமிக்கவனாக இருக்க வேண்டும் என்பதற்காக என் தந்தை எண்ணற்ற தியாகங்கள் புரிந்தார். என் வாழ்வில் விடியல் மலர்வதற்காக அவர் அல்லும், பகலும் ஓயாமல் உழைத்தார். அவரின் உழைப்பின் கனிகள் தற்போது காய்த்துக்குலுங்குவதைக் காண்கிறேன். இன்று அதைக்குறித்து நான் பேருவகைக் கொள்கிறேன் ரமா.

ரமா, அதற்கு இணையாக யஷ்வந்தும் கல்வியில் கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டும். அவன் உள்ளம் புத்தகங்கள் மீது தீராத் தாகத்தைக் கொண்டிருக்குமாறு தூண்டிவிட வேண்டும். ரமா, பணம், ஆடம்பரம் ஆகியவற்றால் பயனொன்றுமில்லை. உன்னைச்சுற்றி அவற்றைக் கட்டாயம் கண்ணுற்றுக் கொண்டே இருப்பாய். இத்தகைய சுகங்களை நாடி மக்கள் ஓயாமல் அலைகிறார்கள். இந்த ஒற்றை இலக்கில் மட்டுமே இம்மக்களின் வாழ்க்கை தேங்கி விடுகிறது. அவர்கள் வேறு எந்த முன்னேற்றம், வளர்ச்சியையும் நாடுவதில்லை. இத்தகைய வாழ்க்கையில் நாம் திருப்தியடைந்து விடக்கூடாது ரமா. நம்மைச்சுற்றி வேதனையைத் தவிர வேறொன்றுமில்லை. வறுமை மட்டுமே நம்முடைய துணைவனாக இருக்கிறது. பிரச்சினைகள் நம்மைவிட்டு விலகுவதேயில்லை. அவமானம், வஞ்சிப்பு, ஏளனம் நம் நிழலைப்போலப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நம்மை இருட்டும், துயரக்கடலும் மட்டுமே சூழ்ந்திருக்கின்றன.

நாமே நம்முடைய மீட்பர்களாக இருக்க வேண்டும். நாமே நமக்கு வழிகாட்டியாக மாற வேண்டும். நாம் தேர்ந்தெடுத்த பாதையில் தீபங்களை ஏற்ற வேண்டும். இந்த வெற்றி நோக்கிய பாதையில் நாமே நடை போடுவோம். சமூகத்தில் நமக்கென்று இடம் எதுவுமில்லை. நமக்கான இடத்தை நாம் தான் உருவாக்க வேண்டும். நம் நிலைமை இப்படியிருப்பதால், யஷ்வந்த்துக்கு உயர்ந்த கல்வியை நீ வழங்க வேண்டுமென விரும்புகிறேன். அவன் முறையாக ஆடையணிவதை உறுதிசெய்வதோடு, சமூகத்தில் பண்புநலன்களோடு பழகவும் பயிற்றுவிக்கவும். நீ அவன் மூளையில் லட்சியத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

உன்னைப்பற்றியே ஓயாமல் நினைத்துக்கொண்டிருக்கிறேன். யஷ்வந்த் குறித்தும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். உன்னை நான் புரிந்து கொள்ளவில்லை என எண்ணிவிடாதே ரமா. உன் வேதனையை நான் உணர்கிறேன். உதிரும் இலைகளைப் போல உன் உடல்நலம் தேய்வதையும், உன் உயிர் மரம் காய்ந்து சருகாவதையும் அறிவேன். ஆனால்,நான் என்ன செய்ய இயலும் ரமா? எப்போதும் விலக மறுக்கும் வறுமை ஒருபுறம் இழுக்கிறது, மற்றொருபுறம் என்னுடைய பிடிவாதமும், உறுதிமிக்கச் சபதமும் நிற்கிறது. அறிவைத் தேடியடைய வேண்டும் எனும் என்னுடைய சபதம்.

வேறு எதைப்பற்றியும் கவலைப்படாமல் அறிவுத்தேடலில் என்னை மூழ்கடித்துக்கொண்டு விட்டேன். என்னைத்தாங்கும் வலிமைமிக்கத் தூணாக நீயே இருக்கிறாய். என்னுடைய உலகத்தைக் கவனித்துக்கொள்கிறாய். உன் கண்ணீரைக்கொண்டு என் மனவுறுதியை வளர்த்தெடுக்கிறாய். இதனால்தான் எல்லையற்ற அறிவுப்பெருங்கடலில் எந்தத் தடையுமின்றி நான் ஊறித்திளைக்க முடிகிறது. நான் சத்தியமாகக் கொடுமைக்காரன் இல்லை ரமா. என் அறிவு வேட்கையைச் சளைக்காத தேடலின் மூலம் தணித்துக் கொண்டிருக்கிறேன். இதிலிருந்து திசைதிருப்பும் எதுவும் என்னைக் காயப்படுத்துகிறது. என் அமைதியை சீர்குலைத்து, கோபம்கொள்ள வைக்கிறது. எனக்கும் இதயம் உள்ளது ரமா, நான் பரிதவிக்கிறேன், ஆனாலும், புரட்சிக்கு என்னை ஒப்புக்கொடுத்திருக்கிறேன். இந்த உயரிய லட்சியத்திற்காக என் உணர்ச்சிகளைத் தீயிட்டு பொசுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இதனால், நீயும், யஷ்வந்தும் கூடச் சமயங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பது உண்மை. ஆனால், இந்த மடலை ஒரு கையால் எழுதிக்கொண்டே இன்னொரு கரத்தால் உன் கண்ணீரைத் துடைக்கிறேன். நம்ம செல்ல "பட்லே"வை (யஷ்வந்த்) பார்த்துக்கொள் ரமா. அவனை அடிக்காதே. நான் அவனை அடித்திருக்கிறேன். அதை ஒருக்காலும் அவனுக்கு நினைவுபடுத்தாதே. அவன் உன்னுடைய பிரிக்கமுடியாத பகுதி.

இந்தச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் மத, உளரீதியான பக்கச்சார்புகள், சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அறவே வேரறுக்கும் வழியைக் கண்டடைய வேண்டும். இவை அன்றாட வாழ்வில் ஆழமாக ஊறிப்போயிருக்கின்றன. இவற்றை மொத்தமாக எரித்திட வேண்டும். மீண்டுவர முடியாதவகையில் புதைத்திட வேண்டும். இவற்றைச் சமூகத்தின் ஞாபகம், கலாச்சாரத்தில் இருந்தும் கூட அறவே அகற்ற வேண்டுமென விரும்புகிறேன்.

ரமா, இந்த மடலை படித்துக்கொண்டிருக்கும் போதே உன் விழிகளில் வழியும் நீரின் ஈரத்தை உணர்கிறேன். நீ திக்குமுக்காடிப் போயிருக்கிறாய் என எண்ணுகிறேன். உன் இதயம் கனத்துப்போயிருக்கும். உன் உதடுகள் நடுங்கிக்கொண்டிருந்தாலும், உன் உணர்ச்சிகளுக்கு நீ சொல்ல முயல்பவற்றைக் கடத்தும் வார்த்தைகள் கிடைக்கவில்லை. நீ அத்தகைய உடைந்துவிடக்கூடிய உணர்ச்சிகரமான நிலையில் இருக்கிறாய்.

ரமா, நீ என் வாழ்க்கையில் இல்லையென்றால் என்னாகி இருக்கும்? நீ என் துணையாக உடன்வராமல் போயிருந்தால் என் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும்? வாழ்க்கையில் சொத்து சுகமே முக்கியம் என எண்ணுபவளாக இருந்திருந்தால், என்னைத் தனியே தவிக்கவிட்டு போயிருப்பாள். யாராவது எப்போதும் பசியால் வாடவும், பம்பாயில் பசுமாட்டின் சாணியைத் தேடியலையவும், அதை வறட்டியாக்கி அடுப்பெரிக்கவும் யாராவது விரும்புவார்களா? வீட்டில் கிழிந்து போன துணிகளை ஒட்டுப்போட்டுக் கொண்டும், வறுமைக்கொடுமையில் நான் கொட்டும், 'ஒரே ஒரு வத்திப்பெட்டி தான் மாதம் முழுவதற்கும்' அல்லது 'இருக்கிற அரிசி,பருப்பு, உப்பை வச்சு மாசக்கடைசி வரை ஓட்டித்தான் ஆகணும்' முதலிய சொற்களைத் தாங்கிக்கொள்வார்கள்?

என்னுடைய ஆணைகளை நீ கடைபிடிக்காமல் முரண்டுபிடித்திருந்தால் என்னாகி இருக்கும்? நான் உடைந்து போன உள்ளத்தோடு, என் சபதத்தைக் காப்பாற்ற முடியாதவனாகப் போயிருப்பேன். முற்றிலும் நிலைகுலைந்து, எண்ணிப்பார்க்க கூட முடியாத அளவுக்கு என் கனவுகள் சுக்குநூறாகியிருக்கும். ரமா, என் வாழ்வில் நான் தேடுவதையெல்லாம் தொலைத்திருப்பேன். எல்லாமும், என்னுடைய எல்லா உள்ளக்கிடக்கைகளும் நிறைவேறாமல், காயப்பட்டுப் போயிருப்பேன். சிறு பதரைப்போலப் பொருளற்றவனாக இருந்திருப்பேன்.

உன்னையும், என்னையும் பார்த்துக்கொள். சீக்கிரம் ஊர் திரும்பிவிடுவேன். கவலைப்படாதே.

என்னுடைய நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

உன்னுடைய,
பீமாராவ்,
லண்டன்,
30 டிசம்பர் 1930

(அண்ணல் அம்பேத்கர் தன்னுடைய மனைவி ரமாபாய்க்கு எழுதிய இக்கடிதம் மூன்று மொழிகளைக் கடந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அம்பேத்கரியர் யஷ்வந்த் மனோகர் எழுதிய 'ரமாய்' எனும் ரமாபாய் குறித்த வரலாற்று நூலில் மராத்தி மூலம் காணக்கிடைக்கிறது.இம்மடலை பரத் யாதவ் இந்தியில் மொழியாக்கம் புரிந்தார். அதனைத் தோஷ் ஆங்கிலத்திற்கு மொழிமாற்றினார்.)

தமிழில்: பூ.கொ.சரவணன்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H