* ஏ.சி.யில் இருக்கும் பில்டரில் சேரும் தூசியை வாரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அதில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத தூசிகள், குழந்தைகளின் மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிடும். இந்தத் தூசியை வெளியேற்றுவதற்காக, நுரையீரலானது சளியை அதிகமாக உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
* குழந்தைகளுக்கு உடல் டெம்பரேச்சர் மாறுவது பற்றிச் சொல்லத் தெரியாது. எனவே, சூடான டெம்பரச்சரிலிருந்து சட்டென ஏசி அறைக்குள் அழைத்துச் செல்லாதீர்கள். அல்லது, அறைக்குள் நுழைந்ததுமே 16, 17 எனக் குறைந்த டெம்பரேச்சரில் ஏ.சி.யை வைக்காதீர்கள்.
* ஏ.சி. காற்று சருமத்தை வறண்டு போகச்செய்யும். அதுவே, குழந்தைகளுக்குக் கண்களையும் உலர்ந்துப் போகச் செய்யும். 16 அல்லது 17 டெம்பரேச்சரில் தொடர்ந்து தூங்கும் குழந்தைகளுக்கு, ரெஸ்பிரேட்டரி இன்ஃபெக்ஷன் வரலாம். பிறந்த குழந்தையாக இருந்தால், கதகதப்பான அறையில்தான் தூங்க வேண்டும். ஏனென்றால், அம்மாவின் வயிற்று டெம்பரேச்சர் 30. அந்த டெம்பரேச்சரில்தான் சில மாதங்களுக்கு முன்புவரை அந்தக் குழந்தை இருந்தது. எனவே, 23 - 26 டெம்பரேச்சரில் ஏ.சி.யை வைப்பதுதான் குழந்தைகளுக்கேற்ற லெவல்.
* போர்வையால் தலையை முழுக்க மூடிக்கொண்டு தூங்கினால் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. அதே கான்செப்ட்தான் ஏ.சி.க்கும். ஜோஸ்கதவு, ஜன்னல் எனச் சிறு வழியும் இல்லாமல், எல்லாவற்றையும் மூடிவிட்டுத் தூங்கினால் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது. ஏ.சி.யின் மெக்கானிசம்படி வெளிக்காற்று உள்ளே வந்தாலும், வெளிக்காற்று உள்ளே வருகிறபடி, ஒரு சின்ன ஓப்பனிங் வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் குழந்தைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். இல்லையென்றால், நீங்கள் வெளிவிட்ட காற்றையே குழந்தையும் சுவாசிக்க நேரிடும்.








