மாணவனின் கண்ணோட்டத்தில், கணக்கு = கசப்பு (அல்லது கஷ்டம்)
சுவைக்காமலே “கணக்கு கசப்பு!!” என்று நிறைய மாணவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். கணக்கின் சுவையை அறிய வைக்க சில வழிமுறைகளைக் கையாண்டேன்.
குறிக்கோள்:
- சுவைக்காமலே “கணக்கு கசப்பு” என்று சொல்வதை மாற்ற வேண்டும்.
- புதிர்க்கணக்குகள் மூலம் கணக்கை மாணவர்களிடம் கொண்டு செல்வது.
(எ.கா.)“ஒரு பெரிய காடு; அதற்குள் செல்ல 12 கதவுகள். ஒவ்வொரு கதவிலும் ஒரு பூதம் இருக்கும் அது கேட்கும் வினாவிற்கு நீ விடை சொல்ல வேண்டும்” எனச் சொல்லி சிறிய புதிர்க்கணக்குகளைக் கூறுவேன். மாணவர்கள் ஆர்வமாகக் கேட்க துவங்கினார்கள். ஒரு மாணவன் ஒரு கதவைத் திறந்தான். அவனுக்கான புதிர்க்கதையைக் கேட்டேன்.
வகுப்பில் கேட்கப்பட்ட சில கணிதப் புதிர்கள்:
புதிர்க் கேள்வி 1:
ஒரு கிலோ பஞ்சு, ஒரு கிலோ இரும்பு; இவற்றில் எது எடை அதிகம்?
மாணவர்களின் வெளிப்பாடுகள்:
- “கடைக்குப் போய் ஒரு கிலோ அரிசி மற்றும் சர்க்கரை வாங்கு” எனச் சொல்லும் போது அவர்களின் பதில்கள் “இரண்டும் ஒன்று!!” போலவே உள்ளது.
- “பஞ்சு அதிக இடத்தை அடைத்துக் கொள்கிறது. ஆனால் இரும்பு குறைந்த இடத்தை அடைத்துக் கொள்கிறது. எடை ஒன்று தான். ஆனால், தோற்றம் வெவ்வேறாக உள்ளது” என்பது அவர்களது கருத்து.
ஏழு சம-ஆரமுள்ள வட்டங்கள் உள்ளது. இவற்றை எந்த வரிசையில் பார்த்தாலும் மூன்று வருமாறு எப்படிச் செய்வது?
மாணவர்களை வரையச் செய்தேன். “எப்படி மூன்று வரிசையில் வரைவது?” என மாணவர்கள் யோசித்தனர்.ஒன்பது வட்டம் இருந்திருந்தால்தான் மூன்று வரிசையில் வரைய முடியும் என்று யோசித்தனர்.பலவாறு வரைந்து வரைந்து பார்த்த பின் கடைசியில் விடையைக் கண்டுபிடித்தனர்.
ஒரு மாணவன் கீழே உள்ளவாறு வரைந்து காண்பித்தான்.
புதிரின் விடை:
புதிர்க் கேள்வி 3: மாயச் சதுரம்
’ஒன்று, இரண்டு, மூன்று’ மட்டும் பயன்படுத்தி எந்த வரிசையில் கூட்டினாலும் ஆறு வர வேண்டும்.எப்படி? என்று கூறிவிட்டு, படத்தில் உள்ளவாறு மாயச்சதுரம் அமைத்துக் காட்டினேன்.
| 3 | 1 | 2 |
| 1 | 2 | 3 |
| 2 | 3 | 1 |
அடுத்த கட்டத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லும் நோக்கோடு வினாவைத் தொடுத்தேன்.
புதிர் வினா: ஒன்று முதல் ஒன்பது எண்கள் வரை உபயோகிக்க வேண்டும். எழுதிய எண்களை மறுபடி உபயோகிக்கக்கூடாது. எல்லா வரிசையின் கூட்டுத் தொகை 15 வர வேண்டும்.
புதிரின் விடை:
| 2 | 7 | 6 |
| 9 | 5 | 1 |
| 4 | 3 | 8 |
- மதிய இடைவேளையில், ஆசிரியர் யாரும் இல்லை என்றாலும் அவர்களே தங்களது புத்தகத்தை எடுத்து கணக்குகளைச் செய்துபார்க்க ஆரம்பித்தனர்.
- அன்று முதல் மாணவச் செல்வங்கள் கணக்கைச் சுவைத்து அதில் மேதை ஆவதற்கான முதற் படியை எடுத்து வைத்துள்ளனர்.
- ஒரு விளையாட்டாகக் கணக்கைக் கொண்டு செல்வதன் மூலம் மாணவர்களின் ஆர்வத்தையும், அறிவையும் தூண்ட முடியும் என்பது உண்மையாகிவிட்டது.
Teacher: Gayathri








