இதையடுத்து, நாட்டில், வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.நாட்டில், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனா வைரசால் புதிதாக, 8,909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 2 லட்சத்து, 7,615 ஆக அதிகரித்து உள்ளது.
இதில், 1 லட்சத்து, 1,497 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து, 302 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பிஉள்ளனர். குணமடைந்தோரின் விகிதம், 48.31 சதவீதமாக உள்ளது.இதேபோல், கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனா வைரசால், 217 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில், 103 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, டில்லியில், 33; குஜராத்தில், 29; தமிழகத்தில், 13; மேற்கு வங்கத்தில், 10; மத்திய பிரதேசத்தில், ஆறு.ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா, ஐந்து; தெலுங்கானாவில், நான்கு; ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீரில் தலா, இரண்டு; கேரளா, சண்டிகர், லடாக், பஞ்சாப் மற்றும் உத்தரகண்டில் தலா, ஒருவரும் உயிரிழந்துஉள்ளனர்.
இதையடுத்து, நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 5,815 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, தொடர்ந்து நான்காவது நாளாக, 8,000ஐ தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








