அரசு, அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கில இலக்கியம், பி.காம் போன்ற பாடப்பிரிவுகளில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
தொழில்நுட்பக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பது கடினம் போன்ற காரணத்தால் பொறியியல் மோகம் மலிந்து கலை, அறிவியல் கல்லூரிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
பட்டம் பெற்றுவிட்டால் போட்டித் தேர்வெழுதி அரசு வேலைக்கு சென்றிடலாம் என நம்புகின்றனர்.
இது போன்ற நம்பிக்கையால் மேற்கண்ட பாடப்பிரிவுகள் இவ்வாண்டு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
கரோனா ஊரடங்கால் ஆன்லைன் மாணவர் சேர்க்கை நடை முறைப்படுத்திய நிலையில், ஏற்கெனவே அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஏறக்குறைய முடிந்த நிலையில் அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கத் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாண்டு ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் 2 அல்லது 3 மடங்கு விண்ணப்பங்கள் வரப்பெற்றதாகவும், இவற்றில் குறிப்பாக பிஏ ஆங்கிலம், பிகாம், கணிதம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் குவிந்ததாகவும் கல்லூரி நிர்வாகங்கள் கூறுகின்றன. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் எதிர்பார்த்த அளவில் ஆங்கில இலக்கியம், பிகாம் போன்ற விரும்பிய பாடப் பிரிவுகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைக்காதவர்கள், வேறு வழியின்றி சுயநிதி பிரிவுகளில் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்ந்துள்ளனர்.









