பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு, வெளிநாட்டு மையங்களில் நடைபெறாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐஐடியில்
பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படும் ஜேஇஇ
அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற இருந்தது. எனினும் கரோனா
சூழல் காரணமாகத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது நுழைவுத் தேர்வு
செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
ஆண்டுத் தேர்வை டெல்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி)
நடத்த உள்ளது. இந்நிலையில் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு, வெளிநாட்டு மையங்களில்
நடைபெறாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது
தொடர்பாக வெளியான செய்திக் குறிப்பில், ''தற்போதுள்ள கரோனா கட்டுப்பாடுகள்
காரணமாக தற்போது வெளிநாட்டுப் பயணம் மற்றும் விசா அனுமதி ஆகியவற்றில்
பிரச்சினை உள்ளது. இதனால் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை வெளிநாட்டு மையங்களில்
நடத்த வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில்
வசிக்கும் தகுதி வாய்ந்த மாணவர்கள், இந்தியாவில் உள்ள தங்களுக்கு வசதியான
நகரங்களில் உள்ள மையங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்'' என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கரோனா தொற்று
அச்சம் காரணமாக மருத்துவ, பொறியியல் நுழைவுத் தேர்வுகளைத் தள்ளிவைக்கச்
சொல்லி மாணவர்கள் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.