
தமிழகத்தில், சிறிய நிறுவனங்கள் முதல், பெரிய நிறுவனங்கள் வரை தொழில் துவங்க, ஒற்றைச்சாளர முறையில் இணையதளம் வழியாக அனுமதி பெறும், 'தமிழ்நாடு வணிகம் எளிதாக்குதல் சட்டம் - 2018' ஏப்ரலில் நடைமுறைக்கு வந்தது.இருப்பினும், ஊரடங்குக்கு முன் பதிவு செய்த விண்ணப்பங்கள் மீது கூட, நடவடிக்கை எடுக்காமல், அரசு முடக்கி விட்டதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, தொழில் நிறுவனங்கள் கூறியதாவது:ஒற்றைச்சாளர முறை திட்டம் நடைமுறைப்படுத்தியதே, புதிதாக தொழில் துவங்க வரும் நிறுவனங்களுக்கு, ஆன்லைன் வாயிலாக, விரைவில் அனுமதி கொடுப்பதற்கு தான்.அனைத்து விபரங்களும், ஆன்லைனிலேயே பதிவு செய்து, அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், ஊரடங்கிற்கு முன் பதிவு செய்த விண்ணப்பங்கள் மீது, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆன்லைனில் தான் வேலை நடக்கிறது எனில், பதிவு செய்த விண்ணப்பங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரியவில்லை. இது குறித்து கேட்டால், அலுவலகங்களில் உரிய பதில் அளிக்கவில்லை.பெரு நிறுவனங்கள் விண்ணப்பங்களில், 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன. எனவே, நிலுவை விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.








