கொரோனா
பாதிப்பால் மூடப்பட்டுள்ள பள்ளிகள் செப்டம்பர் மாதம் திறக்கப்படும் என்று
வெளியான செய்தியால், சூழ்நிலை சரியானதற்கு பிறகே பள்ளிகள் திறக்கப்படும்
என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச்
மாதம் 25ம் தேதி முதல் பள்ளிகள் மூடபட்டுள்ளன. இந்த கல்வி ஆண்டுக்கான முதல்
காலாண்டு முடிவடைய உள்ள நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத்
தேர்வு நடத்தப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக 10, பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2
மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு நடக்க வேண்டிய தருணம் இதுதான்.
இதையடுத்து, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால்
பள்ளிகளை நவம்பர் மாதம் திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக
செய்தி பரவியது.
இதையடுத்து, தற்போது இருக்கிற
சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும், கொரோனா
தொற்று படிப்படியாக குறைந்ததும் மக்களின் கருத்து கேட்ட பிறகே சூழ்நிலையை
பொறுத்து பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன்
தொடர்ச்சியாக, சூழ்நிலை சரியான பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர்
முடிவெடுத்து அறிவிப்பார் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இப்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே
தெரிகிறது.