கொரோனா காலத்தில் நீட் தேர்வை நடத்தக்கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை
தொடங்கி வைத்தபின் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன்
ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்
செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாகை மாவட்டம் ஆயக்காரன்புலத்தில் 140
ஏக்கர் பரப்பளவில் ரெடிமேட் ஜவுளி பூங்கா அமைக்கவும், இதற்கான முதற்கட்ட
பணிகளுக்காக ரூ.128 கோடி தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்களில் கெயில் நிறுவனம் மூலம் குழாய் பதிப்பு உள்ளிட்ட பழைய
பணிகள் மட்டுமே நடைபெற்று வருவதாகவும், வேளாண் மண்டலமாக அறிவித்த பின்
புதிய திட்ட பணிகள் எதுவும் துவங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை எனவும்
தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வை நடத்த வேண்டாம் என்று
தாம் தொடர்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதி வருவதாக குறிப்பிட்ட அவர், கொரோனா
தொற்று கட்டுக்குள் வந்தபின் நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின்
நிலைப்பாடு எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.







