சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும்
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில்
சென்று ஆய்வு செய்து வருகிறார்.
நேற்று, கடலூர் மற்றும் நாகை
மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து
ஆய்வு செய்தார். அப்போது, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.
அதையடுத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியபின், கொரோனா
சிகிச்சை பெற்றுவருவோரிடம் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினர்.
கடலூர்
மாவட்டத்தை தொடர்ந்து நாகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும்
பல்வேறு திட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை பின்பு நடைபெற்ற
கூட்டத்தில், முதலமைச்சர் கூறியதாவது, கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள்
குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாகை மாவட்டத்தில் 1016 காய்ச்சல் முகாம்கள்
நடத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் 35,000 பேர் பயனடைந்துள்ளனர்.
குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1200 குளங்கள் தூர் வரப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 2252 பசுமை வீடுகள் கட்டப்பட்டு
உள்ளது. நாகை மாவட்டத்தில் நோய் பரவல் இல்லாமல் கட்டுப்பாட்டில் வைத்து
உள்ளார்கள். ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு
தற்போது சொல்ல முடியாது. 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை பிறகே
முடிவு எடுக்கப்படும் என கூறினார்.







