தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தாக்கத்தால் சில நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் ஓரளவு உயர்ந்து இருப்பது மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்பட்டது.
இதன் மூலம் கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர், கள்ளக்குறிச்சி ஆகிய 24 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
குறிப்பாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 0.50 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதே நேரத்தில் கிருஷ்ணகிரி, நாகை, அரியலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.







