இது, தேர்தல் கமிஷனுக்குள் நடக்க உள்ள கூட்டம். இதில் இருந்துதான், தேர்தலுக்கான பணிகள் துவங்க உள்ளன.தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான கால அட்டவணையை நிர்ணயிப்பது தொடர்பாக, இந்த முதல் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.தற்போதைய நிலையில், ஏப்ரல் முதல் வாரத்தில், தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், ஒரே கட்டமாக, மே முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்பட, அதிக வாய்ப்புகள் உள்ளன.முதல் ஆயத்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, நவ., முதல் வாரத்தில், ஐந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.இந்தக் கூட்டத்தை, தேர்தல் கமிஷனின் பொதுச் செயலர் உமேஷ் சின்ஹா நடத்துவார்.இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், டிச., முதல் வாரத்தில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுடன், மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்துவார்.தற்போது, ஆயத்தப் பணிகள் துவங்கினாலும், டிசம்பரில் இருந்து தான், தேர்தலுக்கான பணிகள் தேர்தல் கமிஷனில் சூடுபிடிக்கத் துவங்கும். வாக்காளர் பட்டியல்வரும் 2021, ஜன., 1ம் தேதியை அடிப்படையாக வைத்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது போன்ற பணிகள் அப்போது துவங்கும்.கடந்த, 2016 தேர்தலின்போது, தமிழகத்தில், 5.79 கோடி பேர் ஓட்டளிக்கும் உரிமையை பெற்றிருந்தனர். அவர்களுக்காக, 65 ஆயிரத்து, 616 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
வரும் தேர்தலில், 6.20 கோடி பேர் ஓட்டளிக்கும் உரிமையை பெறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. அதனால், வரும் தேர்தலில், ஓட்டுச் சாவடி களின் எண்ணிக்கைஅதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியிட தடை! அஸ்வினி குமார் உபாத்யாய் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில், பொது நலன் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
மனுவில் அவர் கூறியுள்ளதாவது:தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, 2019 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற, 539 பேரில், 233 பேர், அதாவது, 43 சதவீத எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர். கடந்த, 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தீவிர குற்றம் உள்ள, எம்.பி.,க்கள் எண்ணிக்கை, 109 சதவீதம் உயர்ந்துள்ளது. அதில், ஒரு எம்.பி., மீது மட்டும், 204 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.'தீவிர குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை, தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்' என, சட்டக் கமிஷன் கூறியுள்ளது. நீதிமன்றங்களும் இது போன்ற உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.
ஆனால், இதுவரை அதை அமல்படுத்தவில்லை. சட்டக் கமிஷனின் இந்தப் பரிந்துரையை நடைமுறைபடுத்தும்படி, மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. - புதுடில்லி நிருபர் -








