அரியர் தேர்வுக்கு பணம் செலுத்தாத மாணவர்கள் தேர்ச்சி இல்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தேர்வு நடத்தமுடியாத சூழல் உள்ளதால் பல மாநிலங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இறுதி செமஸ்டர் தேர்வுகளைத் தவிர்த்து பிற தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தி பின்னர் தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு அரியர் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அரியர் தேர்வுக்கு பணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு பலர் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அரியர் தேர்வுக்கு பணம் செலுத்தாத மாணவர்கள் தேர்ச்சி இல்லை எனவும் அடுத்த தேர்வுகளில் உரிய பணம் செலுத்தி தேர்வை எழுதிக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார். மேலும், "அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் தமிழக அரசின் முடிவில் மாற்றம் இல்லை. பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டாலும் இரண்டிலுமே அண்ணாவின் பெயர் இருக்கும். பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 406 மாணவர்கள் தகுதி பெற்றவர்கள்." என்று தெரிவித்துள்ளார்.